வாழ்வாதார சூழல் மீட்பு பிரச்சார பயணம் - இடையபட்டி வெள்ளிமலை காடு

"காத்து, நெழல், மூலிகை, அடைக்கலம், கால்நட மேய்ச்சல் நெலம் ன்னு எங்களுக்கு எல்லாவுமா இருந்து, தெய்வமா எங்கள காத்து நிக்குற வெள்ளிமலை காட்ட அழிச்சுப்புட்டு, பாதுகாப்பு படை முகாம் கட்டி உங்கள பாதுகாக்கிறோம் ன்னு சொல்றாங்க?" மேய்ச்சல் பூமியை அழிச்சு தரிசாக்கிட்டு இப்ப எங்களுக்கு இலவசமா ஆடுமாடு கவர்மெண்ட் தருது. அதுகளுக்கு தினமும் ஹோட்டல்ல போயி இட்லி வாங்கி ஊட்ட முடியுமா? ஆடு மேய்க்கும் ஒரு அய்யாவின் குரல் இது.

"மேய்ச்சல்தான் எங்க தொழிலு, சுத்துப்பத்து ஊர்ல கெடுக்குற எல்லா கால்நடைகளுக்கும் இந்த காடுதான் ஆதாரம். சனங்களுக்கு நோய்நொடி ஏதும் வந்துருச்சுன்னா காட்டுக்குள்ள இருந்து மூலிக பறிச்சாந்து பண்டுவம் பாத்தாதான் உயிர் பொழைக்கும். காட்டுக்குள்ள போயி சுண்டக்காவும், சுள்ளியும் பொறுக்கித்தான் எங்க வூடுகள்ல அடுப்பெரியும். இந்த காடுதான் எங்கள காத்து நிக்கிற சாமி. அதனால நாங்க யாரும் காட்டுக்குள்ள செருப்பு போடமாட்டோம். மரத்த, சீவரசிகள வேட்டையாட மாட்டோம். யாரவது காட்டுக்கு சேதம் செஞ்சா சாமி தண்டிச்சிரும். இத சொன்ன்னா மூடநம்பிக்கைங்கிறாங்க. பாதுகாப்பு படையோடு துப்பாக்கிகள்தான் இனி பாதுகாவல் ன்னு சொல்றதுக்கு பேரு நம்பிக்கைங்கிறாங்க. என்னத்தையா சொல்ல மத்திய சர்க்கார எதிர்த்து' ஆடு மேய்க்கும் ஒரு அம்மாவின் குரல் இது.
"இருக்குற ஆடுமாடு மேய்ச்சுகிட்டு, பெரியாத்து ஓடத்தண்ணிய நம்பி வெள்ளாம செஞ்சு, சுள்ளி, சுண்டக்க பொறுக்கி, காட்ட காவல் காத்துகிட்டு, பங்குனி உத்திரத்துல திருவிழா நடத்திக்கிட்டு, யாரோட தயவுமில்லாம நாங்க ராசாவாட்டம் வாழ்ந்துகிட்டு இருந்தோம். அரசாங்க ஆளுங்க வந்தாங்க. இன்னும் எத்தன நாளுக்கு ஆடுமாடு மே்ப்பீங்க? பெரிய பெரிய ராணுவ முகாம் வருது, ரோடு போட்டுத்தறோம், பள்ளிக்கூடம் கட்டித்தறோம். எல்லாருக்கும் பட்டாளத்து வேலைவாய்ப்பு வந்துரும் ன்னு ஏதேதோ சொல்லி எங்க காட்ட எங்க கண்ணு முன்னாலையே சீரழிச்சிட்டாங்க. பாதுகாப்பு படை முகாம் முழுக்க வடநாட்டு ஆளுங்கதான் இருக்காங்க. எங்க ஊர்கள்ல அந்த அதிகாரிகளெல்லாம் வூடு எடுத்து தாங்குறாங்க. ராசவட்டம் இருந்த எங்க ஊர்காரவுக முகாம் வாசல்ல வாட்சுமேனாவும், அதிகாரிங்க வூட்டு பாத்திரம், கக்கூஸ் கழுவுற வேலைக்கும் போகுதுங்க. வக்கத்த சனங்க வெளிய கூலி வேலைக்கு போகுதுங்க. இதுதான் எங்களுக்கு கெடச்ச வேலைவாய்ப்பு. முகாம் ல இருந்து நெறைய பிளாஸ்டிக் குப்பைக கொட்டுறாங்க. இது சாப்பிட்டு எங்க மாடுக எல்லாம் செத்து போச்சி. இதுதான் எங்களுக்கு கெடச்ச வளர்ச்சி" ஊர் பெரியவரின் குரல் இது.

'வெசபாம்பு, நரி எத கண்டும் அசராம பொம்பளைங்க நட்ட ராத்திரிலையும் இந்த காடு மேடு பூராம் தைரியமா போகுங்க. ரோடு போடுறோம் ன்னு சொல்லி காட்ட ரெண்டா பொளந்தாங்க. ரோட்டோட ரெண்டு பக்கமும் முகாமுல துப்பாக்கிய ஏத்திக்கிட்டு நிக்குது பட்டாளம். கரடு முரடா இருந்த பாத பளபளன்னு மாறிடுச்சு. ஆனா இப்ப பட்டப்பகல்ல அந்த ரோட்ட கடந்து போறதுக்குக்கூட பயமா இருக்குதுங்கய்யா" ஊர் குமரியின் குரல் இது
"காட்டையெல்லாம் அழிச்சிபுட்டாய்ங்க இப்ப வந்துருக்கீங்களே சாமி. இருக்குற காட்டையாவது காப்பாத்தி குடுங்க நான் உங்க வூட்டுல வந்து வேல செஞ்சு காலம்பூராம் கடன தீக்குறேன்." கையெடுத்து கும்பிடுது ஒரு பாட்டி.

Comments
Post a Comment