வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்

இடையப்பட்டி வெள்ளிமலை காடு ஒரு அறிமுகம்:
மதுரை மாவட்டம் வடக்கு வட்டம், தெற்கு ஆமூர் அஞ்சல், இடையபட்டி ஊரில்
அமைந்துள்ளது வெள்ளிமலை காடு. உசில் மரங்கள் அடர்ந்த காட்டின் மையத்திலுள்ள
வெள்ளிமலை என்றோர் குன்றில் கட்டப்பட்டுள்ளது ஆண்டிமுருகன் கோவில். எனவே இதனை
வெள்ளிமலை காடு என்று அழைக்கின்றனர். வெள்ளிமலை காட்டை சுற்றி கிழக்கே ஓவாமலை, ஒத்தமலை மேற்க்கே கருப்புகால் ஊரும் தெற்க்கே தச்சனேந்தல்
ஊரும் வடக்கே இடையபட்டி ஊரும் அமைந்துள்ளது. அரசு வருவாய்துறை பதிவேட்டில்
வெள்ளிமலை காடு "தீர்வு ஏற்படாத தரிசு புறம்போக்கு நிலமாக"
குறிக்கப்பட்டுள்ளது. இக்காடு 461 ஏக்கர் பரப்பளவு
கொண்டது. முன்பு 700 ஏக்கருக்கும் அதிகமாக இருந்ததென்று ஊர் பெரியவர்கள்
சொல்லுகின்றனர். ஆடு மேய்ச்சலை தொழிலாக கொண்ட இடையர் குலத்தவர்கள் வாழ்ந்த பகுதி
என்பதால் வெள்ளிமலை காடு அமைந்துள்ள ஊர் இடையர்பட்டி என்றும் பின்னாளில் இடையபட்டி
என்று அழைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேய்ச்சல் தொழிலை அடிப்படையாக கொண்டவர்களின்
வாழ்வாதாரமாக வெள்ளிமலை காடு விளங்குகிறது. வெள்ளிமலை காடு தமிழகத்தில் அரிதாகி வரும்
நாட்டார் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடையை கோவில்காடுகள் அமைப்பாகும். பரப்பளவில்
தமிழகத்தின் ஒரு மிகப்பெரிய கோவில்காடு இதுவாகும். வெள்ளிமலை காடு பற்றி அறியும்
முன் கோவில்காடு பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கோவில் காடு:
கோவில்காடு என்பது மரம், செடி, கொடி, புதர், விலங்குகள், நுண்ணுயிர்கள் என
பல்லுயிர் சூழல் கொண்ட இயற்கையான அமைப்பாகும். நந்தவனம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட
தோப்பாகும். கோவில்காடு நாட்டார் தெய்வ (அம்மன், சுடலை, அய்யனார் உள்ளிட்ட) வழிபாட்டோடு தொடர்புடையது. நந்தவனம்
பெருந்தெய்வ (சிவன், பெருமாள்) கோவிலோடு தொடர்புடையது. கோவில்காடுகள்
வனத்துறையின் கீழ் வராது. கோவில்காட்டின் பாதுகாவலர்கள் மக்கள்தான். அதனால்தான்
கோவில்காடுகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வனத்துறையின் கீழுள்ள காடுகள்
தேயிலை, தேக்கு, தைல மரங்கள்
நிறைந்த தோப்பாக மாறி, புலிகள், யானைகள் வாழ
தகுதியற்ற காடுகளாக்கபட்டு விட்டன. இந்தியா முழுவதும் ஏறத்தாழ 50,000 கோவில் காடுகள் இருப்பதாக இதுவரை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 448 கோவில்காடுகள் 28 மாவட்டங்களில்
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. விவசாயம் தோன்றுவதற்கு பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே
இந்தியாவில் கோவில்காடுகள் பற்றிய கருத்துருவாக்கம், மனிதன் காடோடியாக
அலைந்து திரிந்த நாட்களிலேயே, தோன்றிவிட்டது
என்று வரலாற்று அறிஞர் கோசாம்பி கூறுகிறார். ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான கோவில்
நந்தவனங்கள் பக்தி இயக்க காலத்திற்கு பின்புதான் ( கி பி 600 முதல் 900 வரை)
நிறுவப்பட்டன என்பதற்கு இலக்கிய, கல்வெட்டு
ஆதாரங்கள் பல சான்று பகிர்கின்றன. தமிழர் இறைவழிபாட்டிலும் ஆன்மவியலிலும் கோவில்காடுகள் மிக பழமையான அமைப்பாகும் என்பது தெளிவு.
எத்தகைய தாவரங்கள், விலங்குகள்
ஆயினும் அவற்றிற்குப் பயன் உண்டோ, இல்லையோ, அவையனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியவை என்ற கருத்து நம்
முன்னோர்களிடம் இருந்து வந்தது. தாவரங்களை பாதுகாக்கும் முக்கிய அமைப்புகளாக
கோவில்காடுகள் செயல்பட்டன. நம் முன்னோர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைக் கடைபிடித்ததால்
இயற்கையின் செல்வங்களில் ஒன்றான தாவரங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தையும், நன்மைகளையும் நன்கு உணர்ந்திருந்தனர். பயம், பக்தி, நம்பிக்கை ஆகிய
மூன்றின் மூலம்தான் இயற்கைப் பாதுகாப்பை வலியுறுத்தவும் நடைமுறைப்படுத்தவும் முடியும் என்ற கருத்தில் பண்டைய தமிழர் மிகத் தெளிவாக இருந்தனர்.
கோவில்காடுகளில் நாட்டுப்புறத் தெய்வங்கள் அல்லது கிராம
தெய்வங்கள் உறைந்துள்ளன என்றும் எனவே இக்காடுகளை அழிப்பவர்கள் அங்கு
குடிக்கொண்டுள்ள தெய்வங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் மக்கள் நம்பினார்கள். அதனால் காட்டிலுள்ள
விலங்குகள், மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப்பட்டன. இவற்றைப் பற்றிய சமூதாய
நம்பிக்கைகள், கருத்துகள், மற்றும் ஊர்
கட்டுப்பாடுகள் எல்லாமே பெருமளவிற்கு காடுகளின் அழிவை தடுத்து, பராமரிப்பிற்கு உதவும் வகையிலேயே அமைந்துள்ளன. அக்கால மன்னர்களால்
காட்டுப் பகுதியை பாதுகாக்க பாதுகாவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்றும் தெரிய
வருகிறது. இந்த பாதுகாவலர்களுக்கு இரண்டு மா - நிலம் ஊதியமாக கொடுக்கப்பட்டதை
பாண்டிய மன்னனின் கல்வெட்டு ஒன்றும் குறிப்பிடுகிறது. அதே போல காலம்
குறிப்பிடப்படாத ஒரு கல்வெட்டில், ஒரு உயிருள்ள பனை
மரத்தை வெட்டுபவனுக்கு அரசின் ஆணைப்படி தகுந்த தண்டனை வழங்கபப்டும் என்ற செய்தி
குறிப்பிடப்பட்டுள்ளது. தாவரங்களை பாதுகாப்பதில் பழங்கால அரசுகளும் முனைப்போடு
இருந்ததை நாம் அறிய முடிகிறது.
தமிழர்கள் மரங்களையும் தெய்வமாக வழிபாட்டு
பாதுகாத்துள்ளனர். மரவழிபாடு மிகப் பழமையான வழக்கங்களில் ஒன்றாகும். மரவழிபாடு
ஆரியர்களுக்கு முற்பட்டதாகவும், ஆரியர்களுடன் தொடர்பற்றதாகவும், உலகத்தில் பரவலாகக் காணப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
உலகின் பழங்குடி மக்களினங்கள் பலவற்றில் இப்பழக்கம் இன்றும் காணப்படுகிறது.
ஆதியில் மரங்களை வழிபட்டார்கள். மரம் வீழ்ந்த பிறகு, அவ்விடத்தில்
கல்லை வைத்து வழிபட்டார்கள். பின்பு கடவுளுக்கு உருவம் உண்டு என்று கற்பிக்கப்பட்ட
பின்பு சிலைகளாக மாறின. பின்னர் கோவில்களாக உருவெடுத்தன. அதன் எச்சமாக பல
கோவில்களில் தல மரங்கள் உள்ளன. உதாரணமாக கடம்பவனமாக இருந்த மதுரையில் அதை அழித்து பாண்டிய மன்னன் மீனாட்சியம்மன்
கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது. தில்லை வனமாக இருந்த நிலப்பகுதியே இன்றைய
சிதம்பரம். ஆலமரக்காaடு நிறைந்த
பகுதியே இன்றைய திருவாலங்காடு (திரு+ஆலங்காடு) குறும்பலா மரக்காடு நிறைந்த பகுதியே
இன்றைய குற்றாலம் இப்படி நம் ஒவ்வொரு பகுதிகேற்ற சிறப்பு தாவரகாடுகள்
அன்றிலிருந்து இன்றுவரை ஏதோ ஒரு காரணத்திற்காக அழிக்கப்பட்டுக் கொண்டேதான்
இருக்கிறது. இந்தியாவில் ஏறக்குறைய 127 வகையான தாவரங்கள்
பாரம்பரிய மக்களால் வழிபாட்டில் உள்ளது. இதில் ஏறக்குறைய பாதியளவு தாவரங்கள்
தமிழ்நாட்டில் வழிபாட்டிற்கு உரியதாக உள்ளது என்றும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளிமலை கோவில்காட்டின் இன்றைய நிலை:
மேலுள்ளதை எல்லாம் கருத்தில் கொண்டுதான், இடையப்பட்டி வெள்ளிமலை கோவில்காட்டை நாம் அணுக முடியும்.
இடையபட்டி, தெற்காமூர், சொருகுளிப்பட்டி, கட்டையம்பட்டி, முக்கம்பட்டி, தச்சநேந்தால், இசலாணி, வரிச்சூர், கருப்புக்கால், காட்டுகுளம்புதூர், வெள்ளக்குப்பான், நெடுங்குளம், பனைக்குளம், ஆமூர் என சுற்றுவட்டார ஊர்களில் கால்நடை வளர்ப்புத்தான்
முக்கிய தொழில். சேங்காய் ஊருணி, தண்ணித்தாவு ஊருணி போன்ற நீர்நிலைகளை தன்னகத்தே
கொண்டுள்ள வெள்ளிமலை காடுதான் சுற்றுவட்டார ஊர்களில் உள்ள கால்நடைகளுக்கான
மேய்ச்சல் நிலம். சுமார் 461 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடையப்பட்டி வெள்ளிமலை காட்டின்
பரப்பை, இந்தோ - திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை (IDBP) முகாம் 50 ஏக்கரையும், மத்திய பாதுகாப்பு காவல் படை (CRPF) முகாம் 50 ஏக்கரையும், தமிழ்நாடு காவல் படை பள்ளி 75 ஏக்கரையும்
அழித்து ஆக்கிரமித்துவிட்டது. தமிழகத்தை இராணுவமயமாக்கும் முயற்சியாகவே மத்திய
அரசின் இந்த நடவடிக்கைகளை நாம் ஊகிக்க வேண்டியுள்ளது மேலும் 100 ஏக்கரில் சர்வதேச
மருத்துவ பரிசோதனை கூடம் அமைக்க திட்டம் அரசுக்கு அனுப்பட்டுள்ளது. வெள்ளிமலை
கோவிலுக்கு 25 ஏக்கர் காட்டு பரப்பை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள வனப் பகுதியை மத்திய அரசும் மாநில அரசும்
மக்களிடமிருந்து பறித்து கொண்டது. இப்போது எஞ்சியிருப்பதோ 120 ஏக்கரும் குறைவான காட்டு பகுதி மட்டுமே. இதனால் மேய்ச்சல்
நிலம் குறைந்து கால்நடை வளர்ப்பு செய்து வந்த அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம்
பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. காட்டின் கிழக்கு பக்கம் உள்ள கிரனைட் குவாரிகளில்
இருந்து வெகுண்டெழுந்து வரும் வெடி சத்தமும் அரசு காவல் படை முகாம்களில் இருந்து
வருகிற துப்பாக்கிச்சுடு சத்தமும் வன உயிர்களின் வாழ்வியல் சூழலை மேலும்
கேள்விக்குள்ளாக்குகிறது.


வெள்ளிமலையாண்டிக் கோவிலும், காடும் இடையபட்டி, தெற்காமூர், சொருக்குளிப்பட்டி
ஆகிய மூன்று ஊர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. ஊர் வழக்கப்படி
ஆண்டுத்தோறும் காவலுக்கு பத்தில் இருந்து இருபது பேர் வரை ஆள் போட்டு வெள்ளிமலை
காட்டு தாவரங்களையும் பிற காட்டு உயிரினங்களையும் பாதுகாத்து வந்தனர். ஒவ்வொரு தை
மாதமும் அறுவடை முடிந்த பின் காட்டுக்கு காவல் இருந்த ஒவ்வொருவருக்கும், மூன்று ஊர்களை சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் தலைக்கட்டுக்கு
இரண்டு படி நெல் என்கிற வீதம் கூலியாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு ஊதியமாக
பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிமலை ஆண்டிச்சாமி கோவிலோடு தொடர்புடைய காடு
என்பதால் அப்பகுதி மக்கள் பயபக்தியோடு காட்டுக்கு எந்தவித தீங்கும் ஏற்படாதவாறு
ஊர் கட்டுபாட்டை ஏற்று நடந்தனர். சுள்ளிகள் பொறுக்குவதும், உசில் மரத்து இலையில் இருந்து தலைக்கு தேய்த்து குளிக்கும்
அரப்பு பொடி தயாரிப்பதற்கும், மூலிகை
எடுப்பதற்கும் காட்டுக்குள் மக்கள் செல்வார்கள். ஊர்களின் கட்டுபாட்டில் இருந்தவரை
காடு பெரும் பசுமை பரப்பாக, தங்கள் வாழ்வாதாரத்தின் ஊற்றாக இருந்தது. மரங்களை
வெட்டினால், காட்டுக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால் சாமி
தண்டிக்கும் என்கிற ஊர் மக்களின் நம்பிக்கை காலம் காலமாக காட்டை பாதுகாத்து
வந்திருக்கிறது. வெள்ளிமலை காட்டில் காவலுக்கு ஆள் இருந்ததால் மரங்கள் வெட்டவோ
உயிரினங்களை வேட்டையாடவோ அந்நியர்களால் முடியாது. அந்நியர்கள் யாரவது மரம்
வெட்டும் போது பிடிபட்டால், பிடிபட்ட மரக்கட்டைகள் தெற்காமூர் மந்தைக்கு கொண்டு
வரப்பட்டு ஏலத்திற்கு விடப்படும். அதில் கிடைக்கும் வருமானத்தை ஊர் பொது நிதியில்
சேர்த்துவிடுவார்கள். தங்கள் முன்னோர்கள் காலம் காலமாக தெய்வமாக வழிபட்டு
பாதுகாத்து வந்த காடு, சில ஆண்டுகளுக்கு முன்பு இராணுவ முகாம்களுக்காக
வெட்டி சாய்க்கப்பட்ட போது, அதில் இருந்து ஒரு விறகு துண்டைக் கூட அப்பகுதி
மக்கள் தங்கள் பயன்பாட்டிற்காக எடுத்துப் போகவில்லை. அவர்கள் அந்த காட்டில் உள்ள
ஒவ்வொரு மரத்தையும் தெய்வமாகவே வழிபட்டார்கள். காட்டுக்கு தீங்கு விளைவித்த தங்களை
தண்டித்த தெய்வம், காட்டு மரங்களை வேரோடு சாய்த்த ஆளும் வர்க்கத்தை, இராணுவத்தினரை, தங்கள் தெய்வம்
ஒன்றும் செய்யவில்லையே என்கிற அவநம்பிக்கை அவர்களிடம் இல்லை. தங்கள் தெய்வம் தன்
மக்களை மட்டுமே தண்டிக்கும் உரிமை படைத்திருப்பதாக நம்புகிறார்கள். ஒட்டு மொத்த
வனப்பரப்பும் தெய்வம் குடியிருக்கும் கோவில்தான். அதனால் மக்கள் யாரும்
காட்டுக்குள் செருப்பணிந்து செல்வதில்லை. எளிய மக்கள் பண்பாட்டில் நிலம், நீர், காடு, மலை, மரம் என இயற்கை வாழ்வாதாரங்கள் அனைத்தும் தெய்வமாகவே
கருதப்பட்டு வருகிறது. இடையப்பட்டி சுற்றுவட்டார மக்கள் அந்த புதர்க் காட்டை புனித
பூமியாகவே கருதினார்கள். வெட்டுவதற்கென்றே சந்தனம், தேக்கு, செம்மரங்களை வனம் முழுக்க வளர்த்து நிரப்பிக்
கொண்டிருக்கும் வனத்துறையையும், இயற்கை நேசம்
பண்பாட்டோடு கலந்திருக்கும் பட்டிகாட்டு மக்களின் அறஉணர்வையும் ஒப்பிட்டு
பாருங்கள். காட்டை அழிப்பது யார்? பாதுகாப்பது யார்
என்பது புரியும்


தற்போது எஞ்சியிருக்கும் வெள்ளிமலை காட்டை, கடந்த 2013 ஆம் ஆண்டு
இறுதியில் பறவையில் அறிஞர் மருத்துவர் பத்ரி நாராயணன், தாவரவியல் பேராசிரியர் பாபுராஜ், விலங்கியல் பேராசிரியர் ராஜேஷ், இயற்கை ஆர்வலர் இரவீந்திரன், நாணல் அமைப்பை சேர்ந்த தோழர்கள் உள்ளிட்டோர் நடத்திய
ஆய்வின்படி சுமார் 70 வகையான பறவையினங்களும், சுமார் 80 வகையான தாவரயினங்களும், தேவாங்கு, உடும்பு, முயல், கீரி, முள்ளெலி
உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காட்டு விலங்குகளும் வெள்ளிமலை காட்டை வாழிடமாக கொண்டுள்ளதென ஆவணப்படுத்தியுள்ளனர். கடம்ப மர முனி, தேத்தா மர முனி என மரத்தடி தெய்வங்களும் அங்கு வீற்று
இருக்கின்றன.
காடு சுருங்கி, வாழும் சூழல்
பாதிக்கப்பட்டதால் கூட்டம் கூட்டமாக வெள்ளிமலை காட்டில் திரிந்த நரியும் மானும்
தேவாங்கும் ஒன்றுகூட இன்று இல்லை என்பது வேதனையின் உச்சம். 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டப்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் தேவாங்கு சேர்க்கப் பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. தேவாங்குகள் தென்னிந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே
வாழக்கூடிய உயிரினம். உலகில் வேறெங்கும் தேவாங்குகள் இல்லை. IUCN என்கிற சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு தேவாங்கை
அழிந்து வருகிற உயிரினமாக அறிவித்திருக்கிறது. எனவே வெள்ளிமலையில் தேவாங்குகள்
உள்ளனவா என்று ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. சிவிங்கப்புலி, குள்ளநரி, ஓக்கேனக்கல்
அருகே இருந்த வரகு கோழி, கழிமுகங்களில் இருந்த உப்புநீர் முதலை, காவிரியில் இருந்த மயில் கொண்டை மீன், கருப்பு கொண்டை மீன் என தமிழகத்திலிருந்து நம் கண்முன்னே அழிக்கப்பட்ட
உயிரினங்களே அதற்க்கு சாட்சி. டோரோமிரோ என்கிற மரவகைகள் அழிக்கப்பட்டதால் சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே உள்ள ஈஸ்டர் தீவில் தற்போது மக்கள் தொகை வெறும் இருநூறாக குறைந்துள்ளது. மரம் என்பது தனி உயிரில்லை. ஒரு மரக்கவிகையில் (Canopy) மட்டும் 1161க்கும் குறையாத
வண்டினங்கள் அண்டி வாழ்வதாக எர்வின் என்ற அறிஞர் மதிப்பிடுகிறார். இதற்கு எர்வின்
மதிப்பீடு - Erwin Estimate என்று பெயர்.
எனவே ஒரு மரத்தின் அழிவு என்பது பல்லுயிரிய பெருங்குடும்பத்தின் பேரழிவாகும். உலக
வாழ்க்கை என்பது ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது. டெங்கு காய்ச்சல் தாக்கி மக்கள்
இறந்து கொண்டிருந்த போது நிலவேம்பு மற்றும் பப்பாளி சாறும் தான் மக்களை
அந்நோய்களில் இருந்து காப்பாற்றியது. அழிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தாவரங்களும்
நம்மை நம் அடுத்த தலைமுறைகளை எந்தெந்த நோய்களில் இருந்து காப்பாற்றும் வல்லமை
பெற்று இருக்கிறதோ என்பது நமக்கு தெரியாது.
மக்களாகிய நாம் செய்ய வேண்டியது:
"இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும், காடுகள், ஏரிகள், ஆறுகள், காட்டு
விலங்குகள் மற்ற உயிரினங்கள் உள்பட உள்ள இயற்கைச் சுற்றுச் சார்புகளை மேம்படுத்தவும்
பாதுகாக்கவும் மற்றும் உயிரினங்களிடத்தில் பரிவு காட்டவும் ஆவன புரிவதை கடமையாக
கொள்ள வேண்டும்”. என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51(A) கூறுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது சட்டம் நமக்கு
கொடுத்திருக்கு கடமையாகும். எனவே இடையப்பட்டி வெள்ளிமலை காட்டை பாதுக்காக்க மக்கள்
இயக்கமாக ஒன்றிணைந்ந்து அறவழியில் போராடுவோம். போராட்டம் ஒன்றே தீர்வு.
தமிழ அரசின் கவனத்திற்கு:
"நாட்டின் சுற்றுச்சூழலை, அரசு பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். மேலும்
நாட்டிலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும்
பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு மற்றும் அரசு அமைப்புகள் முயற்சி எடுக்க
வேண்டும்” என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் 48(A) வலியுறுத்துகிறது.
தேசிய வனக் கொள்கை, 1988 இன் படி மாநிலமொன்றின் புவிப்பரவளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் வனப்பரப்பு
வெறும் 18% தான். அவ்வகையில் மதுரையில் காடுகளின் பரப்பளவு
வெறும் 11 சதவீதம்தான். எனவே
தமிழக அரசே ! மதுரை மாவட்ட நிர்வாகமே !
- மதுரை வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் காட்டை அழிக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்து !
- வெள்ளிமலை கோவில்காடு அமைந்துள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட பசுமை பரப்பாக உடனே அறிவித்திடு !
- கால்நடை மேய்ச்சல் மற்றும் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பாரம்பரியமான கோவில் காட்டை அழிக்காதே !
நாணல் நண்பர்கள் இயக்கம்
8608266088
naanalnanbargal@gmail.com
Facebook: Naanal Nanbargal
https://www.facebook.com/NanalNanbargal
https://www.facebook.com/NanalNanbargal
Comments
Post a Comment