ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நாணல் நண்பர்கள் இயக்கம்

வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லை ஊர் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றோம்.
வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லை ஊர்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 23.03.17 அன்று நேரில் சந்தித்து, அவர்களின் தொடர் போராட்டத்தில் நாணல் நண்பர்கள் இயக்கம் பங்கேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது. மதுரை வெள்ளிமலை கோவில்காடு தொடர்பாக நாணலின் சிறுநூல் வெளியீட்டை வடகாடு, நல்லாண்டார் கொல்லை மக்களிடம் கொடுத்து, அது தொடர்பாக மக்களிடம் கவன ஈர்ப்பு பரப்புரை செய்தோம். தாளாண்மை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாமயன் மற்றும் முல்லைவனம் அமைப்பின் தோழர் தவம் அவர்களும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் பங்கேற்றனர். பாமயன் அவர்கள் கண்டன உரையாற்றி, மக்களின் பல்வேறு கேள்விகளுக்கும், வாழ்வாதாரரா அச்சங்களும் பதிலளித்தார். அறவழியில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக 19வது நாளாக வடகாடு உழைக்கும் மக்களும், 37வது நாளாக நல்லாண்டார் கொல்லை உழைக்கும் மக்களும் போராடி வருகின்றனர். ஊடக வெளிச்சம் பெரியளவில் கிடைக்காமல், அரசு தரப்பின் எந்த பேச்சுவார்த்தைக்கு சமரசமாகாமல், 'ஹைட்ரோகார்பன் திட்டத்தை அரசு கைவிடும்வரை போராடுவோம்' என்று தாங்கள் கொண்ட கோரிக்கையில் உறுதியாக நின்று போராடும் மக்களோடு ஒரு போராட்டத்தில் பங்கேற்றதை நாணல் நண்பர்கள் இயக்கம் பெருமையாக கருதுகிறது. போராட்டத்தில் பங்கேற்று தோழர் கவி தமிழ், தமிழ்தாசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.






ஹைட்ரோகார்பன் குழாய்கள் பதிக்கப்பட்டு இருப்பது, வடகாடு, நல்லாண்டார் கொல்லை ஊர்களிலும்தான். ஆனால் ஹைட்ரோகார்பன் குழாய்கள் நெடுவாசல் ஊரில் பதிக்கப்படவில்லை. அனைத்து ஊர்களின் வாழ்வாதார நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை துவங்கிய நெடுவாசல் மக்களின் போராட்டத்தை மட்டும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் தற்காலிகமாக நிறுத்திவைத்துவிட்டு, எதோ ஒட்டுமொத்த போராட்டத்திற்கும் தீர்வு கிடைத்துவிட்டதாக அரசு விளம்பரம் செய்து கொண்டு இருக்கிறது. கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு பிறகு புதிய அணு உலையை தமிழகத்தில் கொண்டு வரமுடியாது என்ற சூழல் ஏற்பட்டு இருப்பதை போல, இனி மண்ணை தோண்டி விவசாயத்தை அழிக்கும் எந்த திட்டத்தையும் தமிழகத்திற்குள் கொண்டு வருவது, அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்க்கு நல்லாண்டார் கொல்லை, வடகாடு, நெடுவாசல் மக்களுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். நாணல் நண்பர்கள் இயக்கம் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான மக்களின் அறப்போராட்டத்திற்கு அனைத்து வழியிலும் துணை நிற்க கடமைப்பட்டுள்ளது.
Comments
Post a Comment