தமிழ் பல்லுயிர் குடும்பம்
குளம் குட்டையோடு கடம்பம், மருதம், இலுப்பை,
பனை, வேங்கை, நாவல், மந்தாரை, கோவை கொடி, கத்தாளை என செடி, கொடி, மரம்
சூழ்ந்திருந்த நம் பசுமை ஊர்களை சற்று திரும்பி பாருங்கள்..... நம்மோடு
சுற்றி திரிந்த பிள்ளை பூச்சி, புழு, தவளை, தட்டான், வண்ணத்து
பூச்சி, மின்மினி, பொன்வண்டு, முயல், நரி, ஓணான், கழுகு, பருந்து, குருவி
என எதையும் காணவில்லை. இவ்வுயிர்களை காணும் வாய்ப்பு நம் பிள்ளைகளுக்கு
இருக்கிறதா? எத்தனை அழகிய சூழலை நாமும் நம் தலைமுறையும் இழந்திருக்கிறோம்
பாருங்கள். தொலைந்து போன இவ்வுயிர்களை கண்டுபிடித்து தரும் கடமை காவல்
நிலையங்களுக்கு இல்லை. அதற்க்கு இந்திய சட்டத்தில் இடமுமில்லை. பாரம்பரிய
நேசத்தை இழந்து நிற்கும் நம்முடைய சுயநலமும் அலட்சியமும்தான் இந்நிலைக்கு
காரணம். அடுத்து வளர்ச்சி என்ற பெயரில் கண்மூடித்தனமாக இயங்கும் ஆளும்
வர்க்கம்.

உலகில் உள்ள பல்லுயிர்களில் வெறும் 14 சதவீத உயிர்களை மட்டும்தான் இதுவரை நாம் கண்டறிந்து பெயர் வைத்திருக்கிறோம் என்றால் நம் சிந்தனைக்கும் கற்பனைக்கும் எட்டாத இயற்கை அன்னையின் மடியில் தவழும் பல்லுயிர் வளம் எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள். மரங்கள் தொடங்கி மனிதன் தவிர இந்த மண்ணில் வாழுகிற எல்லா உயிர்களும் இயற்கைக்கு கட்டுப்பட்டு தன் வாழ்வை அமைத்து கொள்கிறது. மண்ணின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு எந்தெந்த உயிர்கள் இந்த புவியில் எங்கெங்கு வளர வேண்டும் என்று இயற்கை முடிவு செய்கிறது. இது இயற்கையின் விதி. அழகு என்று கருதி வெளிநாட்டு பூச்செடிகளும், மரங்களும் இங்கு நடப்படுகின்றன. இது இயற்கை விதிமீறல். பெரும்பாலும் சமூக அக்கறையோடு நிகழும் மரக்கன்று நடும் விழாக்களில் கூட இந்த விழிப்புணர்வு இல்லாமல் பல அன்னிய நாட்டு தாவரங்களை இங்கே நடுகின்றனர். தானாகவோ அல்லது பூச்சிகள் பறவைகள் வழியாகவோ அன்னிய செடிகள் இந்த மண்ணில் பரவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. அதனால் ஏற்படும் தீய விளைவுகளுக்கு சீமகருவேலம், பார்தியினியம் போன்ற தாவரங்கள் ஒரு சான்று. இதற்க்கு காரணம் இயற்கை அல்ல, விழிப்புணர்வு இல்லாத அல்லது பேராசை கொண்ட மனிதன்தான். வனத்துறையால் நடப்படும் மரக்கன்றுகள் கூட பெரும்பாலும் அன்னிய மரங்களாகவே இருக்கிறது.
அதனால் நாம் அனைவரும் நம் மண்ணில் உள்ள உயிர்கள் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும், பிற நாட்டு உயிர்கள் மீது வெறுப்பை சுரக்க வேண்டும் என்பதல்ல இந்த பதிவின் நோக்கம். (மனிதனைத் தவிர மற்ற உயர்களுக்கு நாடு, சாதி, மதம் எதுவும் கிடையாது) இயற்கைக்கு எல்லா உயிர்களும் சமம்தான். இயற்கை அன்னையின் பிள்ளைகளான நமக்கும் அதே சிந்தனைதான் இருக்குமென்று பெரிதும் நம்புகிறேன். சூழலை பாதுகாக்க முனையும் நாம் முதலில் நம் மண்ணின் மரங்கள் எது? அன்னிய மரங்கள் எது? என்று அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். தமிழாய்வு ஒன்று ”தொல்காப்பியத்தில் 52 தாவரங்களும், சங்க இலக்கியங்களில் 207 தாவரங்களும், சங்கம் மருவிய காலத்தில் 185 தாவரங்களும், பக்தி இலக்கிய காலத்தில் 238 தாவரங்களும்” உள்ளதாக குறிப்பிடகிறது. பல்லுயிர் செழுமையில் இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது தமிழகம்தான் என்பது எத்தனை சிறப்புக்குரிய விடயம். தமிழகத்தில் மட்டும் 1559 மூலிகை தாவரங்கள் உட்பட மொத்தம் 5640 வகை உயிரினங்கள் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அதில் 36 வகை நீர்-நிலம் வாழ் உயிரினம், 63 வகை ஊர்வன, 17 வகை பறவைகள், 24 வகை பாலூட்டிகள் என மொத்தம் 533 வகை உயிரினங்கள் தமிழ் நாட்டை மட்டுமே வசிப்பிடமாக கொண்டு வாழுகிறது என்பது கூடுதல் சிறப்பு. அடடா...நம்மோடு சேர்த்து 533 வகை தமிழ் உயிர்கள் முக்கடல் சூழ்ந்த நம் தமிழ் பரப்பில் தமிழர்களாக வாழுகிறது என்பது எத்தனை மகிழ்வான செய்தி என்று உணர்ந்து பாருங்கள். இயற்கை நமக்கு அளித்த கொடை எத்தகையது என்று புரியும்.
இப்போது நாம் சிந்திக்க வேண்டியதெல்லாம் சூழலை
பாதுகாப்பது எப்படி? அதற்க்கு தனிமனிதனாக அல்லது கூட்டாக நான் என்ன செய்வது
என்பதுதான்.
சிந்தியுங்கள்...
தமிழன் தனி ஆளில்லை.
அவனுக்கென்று ஒரு ஆகப்பெரும் பல்லுயிர் குடும்பத்தை பரிசளித்திருக்கிறது இயற்கை.
சிந்தியுங்கள்...
தமிழன் தனி ஆளில்லை.
அவனுக்கென்று ஒரு ஆகப்பெரும் பல்லுயிர் குடும்பத்தை பரிசளித்திருக்கிறது இயற்கை.
கா. கார்த்திக்
நாணல் நண்பர்கள் குழு
நாணல் நண்பர்கள் குழு
மதுரை
9976444674
Comments
Post a Comment