சிறுமலைக் காடு ஒரு பயணம்


Add caption
காட்டெருமை, செந்நாய், மான், கேளையாடு, கரடி, முள்ளம்பன்றி, நரி, குரங்கு, சாம்பல் அணில், கீரி, பாம்பு, உடும்பு, ஆந்தை, கழுகு, பட்டாம்பூச்சிகள், தனக்கு, உசில், மருத மரம் என பல்லுயிர் பெருகிகிடக்கும் பசுஞ்சோலை சிறுமலைக் காடு. கடல் மட்டத்தில் இருந்து 1600 கி.மீ. உயரத்தில் அமைந்துள்ள சிறுமலையில் இரண்டு ஆறுகள் உற்பத்தியாகிறது. ஒன்று திண்டுக்கல் நோக்கி பாயும் சந்தானவர்த்தினி ஆறு. மற்றொன்று மதுரையை வாழ வைக்கும் சாத்தையாறு. ஆக சிறுமலைகாடு உயிர்ப்போடு இருந்தால்தான் மதுரை மற்றும் திண்டுக்கல் மக்கள் உயிர் வாழ முடியும்.


கோவை போன்ற நம் பிற நகரங்களில் பரவியுள்ள காடு குறித்த விழிப்புணர்வு மதுரை மக்களிடமும் ஏற்ப்பட வேண்டும். வறண்ட நிலமாகிப் போன மதுரையில் பல்லுயிர் பெருகி செழித்திருக்கும் காடுகள் இருக்கிறதா? என்று பலருக்கு வியப்பாக இருக்கும். அமெரிக்க நாட்டின் சிறப்புகளை அறிந்து வைத்திருப்பதா அறிவு? நம் ஊரின் பண்பாடு,  பெருமை, சிறப்பு, வளம் பற்றிய தெளிவான புரிதல்தானே உண்மையான அறிவு.

ஒளிப்படம் - திரு.ந. இரவீந்திரன்

சிறுமலை என்றால் பலர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது என்று நினைத்து கொள்வர். சிறுமலை வனப்பகுதி பெரும்பாலும் திண்டுக்கல் வனத்துறையின் கீழ் இருக்கிறது. அதில் 5000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு மதுரை வனத்துறையின் கீழும் வருகிறது. சிறுமலையை சுற்றி புதூர், பனையூர், சக்கிலிப்பட்டி, அரளக்காடு, தவிட்டுக்கடை, தாழைக்காடு, கடமான்குளம் உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. வளர்ந்தோங்கிய மரங்கள், சோலைகள் என பசுமையில் ரம்மியாக காட்சியளிக்கிறது சிறுமலை. சிறுமலையில் முதன்முதலாக 1838 ல் காப்பி பயிரிடப்பட்டது. இதை பயிரிட்ட ஆங்கிலேயர் வில்லியம் எலாய்டு. மலையில் 895 வகையான தாவர வகைகள் உள்ளன என்று நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது. சிறுமலை வாழைப்பழத்தின் சுவை புகழ் பெற்றது. மலையின் உயரமான இடம் முள்ளுபன்றி மலை. சிறுமலையில் வெள்ளி மலைக்கோயில் உள்ளது. சிறுமலையின் குறைந்தபட்ச வெப்பநிலை 14 டிகிலி செல்சியஸ், அதிகளவு 30 டிகிரி செல்சியஸ். சிறுமலையிலுள்ள மீன்முட்டிபாறை பகுதியில் உள்ள குகைகளில் ஆதிவாசிகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.

வனத்துறை அதிகாரிகளின் துணையோடு நேற்று மதுரை பாலமேடு அருகில் உள்ள தொத்தூர் கிராமத்தை ஒட்டியிருக்கும் புன்னியவர்ஸ் வனப்பகுதியின் வழியாக அடர்ந்த சிறுமலை வனப்பகுதிக்குள் 27.04.2014 அன்று காலை 7 மணிக்கு நுழைந்தோம். "காடுகளில் ஏதேனும் விட்டு செல்ல வேண்டுமென்றால் உங்கள் மனக்கவலைகளை இங்கே விட்டு செல்லுங்கள். ஒருவேளை வீடு திரும்பும்போது காடுகளில் இருந்து ஏதேனும் எடுத்து செல்ல வேண்டும் என்றால் இந்த பயணத்தின் அனுபவத்தையும், நினைவுகளையும் எடுத்து செல்லுங்கள். காட்டுக்குள் வேறு எதையும் விட்டோ, எடுத்தோ செல்லாதீர்கள். காடு காடாக இருக்கட்டும்" என்று முந்தைய காட்டு பயணத்தின் போது நண்பர் ஓசை இளஞ்செழியன் அறிவுறுத்திய வார்த்தைகளை இறுக பிடித்துக் கொண்டே காட்டுக்குள் பிரவேசித்தோம்.
 பெருபான்மையான மரங்கள் பட்டுபோய், காட்டுப் பரப்பு வறண்டு கிடந்தது. சிறுமலையில் உற்பத்தியாகும் சாத்தையாறு கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி பாலையாக மாறியுள்ளது. காட்டு பரப்புக்குள் காலடி எடுத்து வைத்த கணமுதல் ஒரே அதிர்ச்சி. வறட்சியின் கொடிய சாட்சிகளாக காயம் ஏதுமில்லாமல் பல குரங்குகளின் சடலங்கள் செத்து மடிந்து அங்குமிங்குமாய் சிதறிக் கிடந்தது. தண்ணீர் இன்றி தவிக்கும் நமக்கு குடிநீரை வழங்க அரசு அமைப்புகள் உள்ளன. காட்டுயிர்களுக்கு இயற்கை அன்னையை தவிர வேறு நாதியில்லை. பல்லுயிரியத்தின் உரிமையான தண்ணீர் மானுடத்தின் வணிக நுகர் பொருளாக மாறியதன் கொடிய விளைவை கண்கூட காணும் வாய்ப்பை சிறுமலை தந்தது.
ஒளிப்படம் - திரு. இ.சுதாகரன்

ஒளிப்படம் - திரு. பாலாஜி
தென் இந்தியாவை பொருத்தவரை அனைத்து நதிகளும் மலைக்காடுகளில் இருந்துதான் உற்பத்தியாகிறது. மதுரையில் உள்ள பல கண்மாய்களுக்கும் ஏரிகளுக்கும் வாழ்வாதாரமாக விளங்குகிறது சாத்தையாறு. ஈவிரக்கமின்றி நம் காடுகள் அழிக்கப்பட்டதுதான் தண்ணீரின்றி உயிர்கள் செத்து மடிய பெருங்காரணம். இதில் கொடுமை என்னவெனில் தண்ணீர் தட்டுப்பாடின் போது தன்னெழுச்சியாக குடங்களோடு சாலைமறியலில் ஈடுபடும் நம் சமூகத்திற்கு "மலைக்காடுகளை காப்பற்றுங்கள்" "நீர்நிலைகளை மேம்படுத்துங்கள்" "சாலையில் உள்ள மழைநீர் வடிகாலை ஒழுங்குப்படுத்துங்கள்" என்கிற அரசியல் கோரிக்கை முன்வைப்பதற்கான அறிவியல் விழிப்புணர்வு இல்லை.
செய்தி - 01.05.2014 The Hindu

பால் என்றால் பாக்கெட்டில் வரும், தண்ணீர் என்றால் குழாயில் வரும் என்கிற நிலையில் இருக்கிறது நமது பொதுபுத்தி. காடுகளை காப்பாற்ற பெரிய முயற்சிகள் எதுவும் தேவையில்லை. அரசும், பன்னாட்டு சுரண்டல் கும்பல்களும் ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்தாலே போதுமானது. அவற்றை சும்மா இருக்க செய்வதற்குதான் நாம் போராட வேண்டியுள்ளது.
செய்தி - 30.4.2014 Times Of India
சிறுமலைக் காட்டுக்குள் நாம் சென்று வந்த பிறகு, அங்குள்ள அவல நிலையை ஊடக நண்பர்கள் எழுதினார்கள். அதன் விளைவாக வெகு சில நாட்களில் காட்டுக்குள் சூரிய மின்னாற்றலில் இயங்கக் கூடிய நீர் நிரப்பும் தொட்டிகளை மதுரை வனத்துறையினர் அமைத்தார்கள். வன உயிர்களை காக்க உடனடியாக மேற்கொள்ள பட்ட முயற்சிக்கு நாம் வனத்துறையை பாராட்டுகிறோம். ஆனால் நாம் எதிர்பார்க்கிற மாற்றம் அதுவல்ல. நாம் இயற்கை அன்னைக்கு மருத்துவர்களாக, பொறியாளர்களாக நடந்து கொள்வதை தவிர்த்துவிட்டு, அவள் சொல் கேட்கும் செல்ல பிள்ளைகளாக நடந்து கொள்வதே நாம் விரும்புகிற மாற்றமாக இருக்கும். உடன் நின்ற வனத்துறை அதிகாரிகளுக்கு மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி.

எங்களைப் போன்ற சிறு கூட்டம் சிறுமலைக்குள் சென்று பார்வையிட்டு வந்த பிறகு, அங்குள்ள அவல நிலை தொடர்பான ஒரு அதிர்வை இங்கு ஏற்படுத்த முடியுமென்றால் மக்கள் இயக்கமாக குரல் எழுப்பினால், போராடினால் நாம் எதிர் நோக்குகிற மாற்றத்தை இந்த மண்ணில் நிகழ்த்தலாம்.

தி ஹிந்து தமிழ் நாளிதழ்
21.05.2014
இத்தருணத்தில் காஷ்மீர் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 

"இந்த பூமி முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பரம்பரை சொத்து அல்ல. நம் பிள்ளைகளிடம் இருந்து பெற்ற கடன்." கடனை திருப்பி செலுத்தும் கண்ணியமான கடமை நமக்கு இருக்கிறது என்பதை ஞாபகம் வைத்து கொள்வோம்.  


தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
9543663443 

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்