வானூர்தியும் வண்ண பறவைகளும்


வானூர்தி (Aeroplane) தரையிரங்குவதையும் மேலேறுதையும்  வேடிக்கை பார்க்க, மதுரை - அருப்புகோட்டை சாலையில் எப்போதுமே மக்கள் கூட்டம் திரண்டு இருப்பதை அந்த பக்கம் போகிறவர்கள் பார்க்க முடியும்.  பனிக்கூழ் (Ice Cream) வண்டியும் அதன் பக்கத்தில் பனிக்கூழ் வேண்டி சிறுவர்கள் பெற்றோரிடம் அடம்பிடிக்கும் காட்சியையும் பார்க்கலாம். வேடிக்கை பார்க்கிற மக்கள் திரளில் என்றாவது நாமும் ஒருவராக இருந்திருப்போம். காரணம் வேடிக்கை நம் தேசிய குணமாகியிருக்கிறது. தரையிறங்கும் வானூர்தி எந்த நிறுவனத்தை சேர்ந்தது, எங்கே செல்கிறது, எங்கிருந்து வருகிறது என்று தன் பிள்ளைகளுக்கு அத்தனை ஆசையோடு எடுத்து சொல்லும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். வானூர்தியை பார்க்கிற மக்களின் உற்சாக ஆசையால் பனிக்கூழ் விற்கும் தொழிலாளி பயனடைகிறார் என்கிற செய்தி நமக்கு மகிழ்ச்சி தருகிறது.
Times Of India 02.06.2014
அதே வழியில் மண்டேலா நகருக்கு அருகில் சாலையின்  இருபுறமும் அமைந்துள்ள கிளாக்குளம் கண்மாய்க்கு கூட்டம் கூட்டமாக சிறகடித்து வருகின்றன பறவைகள் பல. என்றாவது ஒருநாள் அவ்விடத்தில் நின்று அந்த பறவைகளை இனம் காண முயற்சித்திருப்போமா? நம் பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு பல்லுயிர் சூழலை நாம் பரிட்ச்சயபடுத்தியிருப்போமா? அனேக நம் பிள்ளைகள் அறிந்தவைத்திருக்கும் பறவை ஆங்கிரி பிர்ட் தானே. புத்தக மூட்டை சுமப்பதைவிட புதிதாக என்ன வாய்த்துவிடப் போகிறது நாம் வாரிசுகளுக்கு. நுங்கு வண்டி, தூண்டில், கவட்டை, பூவரசம் பீப்பி, ஆலம்  விழுது ஊஞ்சல் என அவர்களிடமிருந்து பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களை அபகரித்துவிட்டது நகரம். பிள்ளைகளிடம் இருந்து பிடுங்கப்பட்டது வெறும் விளையாட்டுகள் அல்ல, அவை நம் மரபு சார்ந்த அறிவு. 
Times of India 02.06.2014
நகரத்தில் நம்மை அண்டி வாழும் சிட்டு குருவிகள் அழிவதை பற்றி அக்கறை கொள்ளாத நாம், கிளாகுளத்தை வெறுமென கடந்து போவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. குருவிகள் வாழ தகுதியற்ற ஒரு சூழலில் நாமும் நம் பிள்ளைகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வு நம்மிடம் இருக்கிறதா? நாம் உருவாக்கி வைத்திருக்கும் இந்த இரசாயன எந்திரமய சூழல்  பல்லுயிர்களை நாளுக்கு நாள் பலி கேட்கிறது. நாளை நமது உயிரையும் காவு கேட்க்கும், அப்போது எந்திரமய பலிபீடத்தில் யாதுமறியாத நம் பிள்ளைகளின் தலை இருக்கும் என்பதை கவனத்தில் கொள்வோமாக.  எனவே பல்லுயிர் சூழல் ஒன்றே நம் பிள்ளைகளுக்களுக்கான சொத்து.

அதான் தீக்கோழி, பஞ்சவர்ண கிளி, பென்குயின், கங்காரு, வரிக்குதிரை, ஒட்டக சிவிங்கி, பனிக்கரடி என நம் பிள்ளைகள் பல்லுயிர் பற்றி பள்ளிக்கூடங்களில் பாடம் படிக்கின்றன என்று பரவசப்பட்டுக் கொள்கிறோம். மேற்சொன்ன உயிரினங்கள் எதுவும் இந்திய மண்ணில் இல்லை என்கிற உண்மை நமக்கு தெரியாதல்லவா? குறைந்தபட்சம் பாடமெடுக்கிற ஆசிரியர்க்கு அந்த செய்தி தெரிந்திருந்தாலே ஆச்சர்யம்தான். நம் மண் சார்ந்த அறிவை புறக்கணித்து அடிமைகளை உருவாக்கும் வெள்ளைக்கார மெக்காலே கல்வியைதான் இன்னும் நம் பிள்ளைகள் படித்துக் கொண்டு இருக்கிறது என்பதற்கு இதை விட சிறந்த விளக்கம் வேண்டுமா? அரிவாள் மூக்கன்,  ஆள்காட்டி, கூழைக்கடா, செங்கால் நாரை, ஆலா, கூகை போன்ற நம் மண்ணில் வாழுகிற பறவைகள் பற்றி நமக்கோ நம் பிள்ளைகளுக்கோ தெரியுமா? இல்லையென்றால் பறவைகளை காணுகிற ஆர்வத்தை இன்றே வளர்த்துக் கொள்ளுதல் மிக மிக அவசியம். பறவைகளை காணும் ஆர்வம் வந்துவிட்டால் அடுத்து ஒரு தொலைநோக்கு கருவியும், பறவைகள் குறித்த ஏடும் வாங்கிக் கொள்ளுங்கள். பறவைகளை புரிந்து கொள்வதன் வழியாக இந்த பூமியை புரிந்து கொள்ளலாம். தமிழில் பறவைகளின் பெயரை அறிந்துக் கொள்ள வேண்டும். சூழல் தொடர்பாக எதை அறிந்து கொண்டாலும் அதை உங்கள் தாய் மொழி வழியாக அறிந்துக் கொள்ள மெனக்கெடங்கள். 
 மதுரை - அருப்புக்கோட்டை சாலையில் மண்டேலா நகருக்கு சற்று முன் அமைந்துள்ளது கிளாக்குளம் கண்மாய். சுமார் 150 ஏக்கர் பரப்பளவுள்ள இக்கண்மாய் தனியாருக்கு சொந்தமானது. படுத்துறங்க தனக்கென சிறு துண்டு நிலமற்ற ஏழை மக்கள் ஏகோபித்த தேசமிது என்பதால் இவ்வளவு பெரிய கண்மாய் தனியாருக்கு சொந்தமானதா என்று உங்களுக்கு வியப்பாகத்தான் இருக்கும். சாமநத்தம் மற்றும் கிளாக்குளம் கண்மாய்க்கு நீராதாரமாக விளங்கும் அவனியாபுரம் கண்மாய் இப்போது கழிவுநீர் கிடங்காக உள்ளது. அவனியாபுரம் கண்மாய்க்கு அருகேதான் மாநகராட்சி கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் உள்ளது. அவனியாபுரம் கண்மாய் கழிவுநீர் கிடங்காக மாற்றபட்டதற்க்கான அரசு அங்கீகாரம்தான் இந்த சுத்தகரிப்பு நிலையம். ஏறத்தாழ தமிழகத்தில் எல்லா ஏரிகளும் நீர்நிலைகளும் கழிவு நீர் தொட்டிகளாக மாறிவிட்டது. 70 சதவீதம் பூமியை சூழ்ந்திருக்கும் கடல் பரப்பு அணுக்கழிவு தொட்டியாக வல்லாதிக்க நாடுகளால் மாற்றப்பட்ட பிறகு கண்மாய், குளம், ஏரியெல்லாம் எம்மாத்திரம். அது பற்றி நாம் இங்கு பேச வேண்டாம்.

சுத்தகரிப்பு  செய்யபட்ட கழிவு நீர், அவனியாபுரம் கண்மாயில் இருந்து கிளாக்குளம் மற்றும் சாமநத்தம் கண்மாய்களுக்கு பாசனம், மீன் வளர்ப்பு என்று சொல்லி திறந்துவிடப்படுகிறது. நகர விரிவாக்கத்தால் கழிவுநீர் கூடுமே தவிர குறைய வாய்ப்பில்லை. ஆகவே இந்த மூன்று கண்மாய்களிலும் வருடம் முழுதும் நீர் இருக்கும். வலசை வரும் பறவைகள், இருப்பிட பறவைகள் என பல்வேறு விதமான பறவைகளை வருடம் முழுதும் இங்கு காண முடியும். இதில் சாமநத்தம் கண்மாய் நாட்டு கருவேல மரங்கள் சூழ்ந்து இயற்கையிலே ஒரு பறவை சரணாலயம் போல காட்சியளிக்கிறது. நீர்நிலை என்பது இயற்கையில் எல்லா உயிர்களுக்கும் சொந்தம்தானே. சாமநத்தம் கண்மாய் மீன்பிடி குத்தகைக்கு விடப்பட்டு இருக்கிறது. காலம் காலமாக கிராமத்தின் பொது சொத்தாக இருந்த நீர்நிலையையும் கூட்டு வேலையாக இருந்த மீன்பிடி தொழிலையும் தனியுடமைபடுத்துகிற லாப நோக்குடைய அரசின் நடவடிக்கை இது.  ஏரியை பணம் தள்ளும் இயந்திரமாக பார்க்கும் குத்தகைகரர்கள் பறவைகளை வெடி போட்டு விரட்டுகிறார்கள். யாரோ ஒரு பெரு  முதலாளியின் லாபவெறிக்கு பல்லுயிர்களின் பொது சொத்தான மலைகளை தூள் தூளாக உடைத்தெரியும் சக்தி வாய்ந்த குவாரி வெடிகளை போன்றதல்ல அது, எனினும் பறவைகளை பயமுறுத்தும் திறன் கொண்டது. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் உட்பட பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இயலாத வக்கற்ற சமூகத்தில் வாழும் நாம், வெடி போட்டு பறவைகளை விரட்டும் குத்தகைகாரர்களிடம் " "பறவைகளை காப்பற்றுங்கள்" என்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

கடந்த 31.05.2014 ஞாயிறு அதிகாலை பறவை காணுதல் (Bird Watching) நிகழ்வை சாமநத்தம் மற்றும் கிளாக்குளம் கண்மாயில் ஏற்பாடு செய்திருந்தோம். 20துக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். 
"கூழைக்கடா, முக்குளிப்பான், நீர்காகம், பாம்புத்தார, வெள்ளை கொக்கு, சாம்பல் நாரை, செந்நாரை, உன்னிக் கொக்கு, குருட்டு கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், சீழ்கை சிறகி, புள்ளி மூக்கு வாத்து, பருந்து, கருடன், கழுகு, ஆந்தை, வல்லூறு, மயில், காடை, கௌதாரி, நாமக்கோழி, நீர்க்கோழி, தாழை இலைக் கோழி, நீள வால் இலை கோழி, உப்புகொத்தி, உள்ளான், புறா, கிளி, குயில், கூகை, பக்கி, உழவரான், மீன்கொத்தி, பஞ்சுருட்டான், பனங்காடை, கொண்டலாத்தி, வானம்பாடி, தகைவிலான், நெட்டைக்காலி, கொண்டைக்குருவி, கதிர் குருவி, நாகணவாய், சொளக்குருவி, தினைக் குருவி, தையல் சிட்டு, அரச வால் குருவி, சிலம்பன், தேன் சிட்டு, மாங்குயில், பூங்குயில், வாலாட்டி, கரிச்சான், தூக்கனாங்குருவி, கருங்க்கொண்டை நாகணவாய், காகம், சிட்டு குருவி போன்ற பலவகை நீர்நிலை, புதர் மற்றும் சமவெளி பறவைகளை இங்கே காணலாம். அருகி வரும் பறவைகளில் ஒன்றான நாணல் புற்களில் கூடு கட்டும் ஒரு வகை தூக்கணாங்குருவியை இங்கே பெருமளவில் காண முடிகிறது. இத்தனை பறவைகளும் இங்கே வருகிறது என்றால், அவைகளுக்கு உணவான தாவரம், மீன், பூச்சி என ஒரு மிகப்பெரும் பல்லுயிர் சூழல் இங்கு உயிர்ப்போடு இருக்கிறது என்று அர்த்தம். அத்தனை உயிர்களுக்கும் தாய் போல மடி தந்து பரந்து விரிந்து கிடக்கிறது நீர்நிலை. இயற்கை அன்னையைத் தவிர ஒருபோதும் இத்தனை உயிர்களுக்கும் நம்மால் அடைக்கலம் தர இயலாது. நான் கடந்த இரண்டு வருடங்களாக இங்கே ஆய்வு செய்து வருகிறேன். இந்த பகுதியை சுற்றி நான் எடுத்த ஆய்வுக்கணக்கின் படி 108 வகை பறவைகள், வலசை வரும் காலங்களில் (ஆகஸ்ட் முதல் மார்ச் முடிய) கணக்கிட்டுளேன். எப்படியும் என் அறிவிற்க்கு புலப்படாத உட்பிரிவுகளும் இருக்கலாம். தமிழ் நாட்டினை பொருத்தவரை 450 வகை பறவைகள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் 20 சதவிகித பறவைகளை நம் நகருக்கு அருகில் காண்பது மிக ஆச்சரியமான விசயம். இதிலும் குறிப்பாக அளவில் பெரிய நாரை இனங்களை இங்கு ஆண்டு முழுவதும் காணமுடிவது அதிசயமே. மதுரை மாநகரில் இருந்து வரும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து நன்னீர் மீன்கள் வாழ வகை செய்து பலவகை மரங்கள் அடங்கிய திட்டு பகுதிகளை உருவாக்கினால், தமிழ அரசு சாமநத்தம் கண்மாயில் பறவைகள் சரணாலயம் அமைக்கலாம்" என்கிறார் பறவையில் ஆர்வலர் திரு. ந. இரவீந்திரன் அவர்கள்.

"ஏறத்தாழ மதுரையில் உள்ள எல்லா நீர்நிலைகளுமே பறவைகளை காணும் பழக்கத்திற்கு ஏதுவானதுதான். மக்களிடம் நீர்நிலை மற்றும் பல்லுயிர் தொடர்பான விழிப்புணர்வு முழுமையாக கொண்டு சேர்க்கப்படவில்லை. கிளாக்குளம் கண்மாய் ஒரு தனியார் இடம் என்பதால் இந்த அழகிய பல்லுயிர் சூழல் எப்போது வேண்டுமானாலும் வீட்டு மனைகளாக மாற்றப்படலாம். அதே போல பறவைகள் உயிரோடு இருந்தால்தான் மனிதர்கள் உயிரோடு இருக்க முடியும் என்றெல்லாம் உயிர் உணவு சங்கிலியை உயர்த்தி சொல்லி திரிகிறோம். அப்படிப்பட்ட சிந்தனையை உருவாக்கித்தான் பல்லுயிர்களை நாம் காப்பாற்ற வேண்டுமா? ஏன் மனிதர்களுக்கு பயன்படாத எந்த உயிரும் இந்த பூவுலகில் வாழவே கூடாதா?" என்றார் நாற்பது வருடங்களாக பறவைகளை ஆய்வு செய்து வரும் பறவை ஆர்வலர் திரு. பத்ரி நாராயணன் அவர்கள்.
The Indian Express 01.06.2014

"இந்தியாவில் 1224 வகை பறவைகள்  உள்ளன என்றும் அதில் 81 வகை பறவைகள் இந்தியாவை மட்டுமே வாழிடாமாக கொண்டுள்ளதென்று ஆய்வொன்று கூறுகிறது. பழங்குடி சமூகத்தின் இயற்கை சார்ந்த விழுமியங்கள் நம்மிடம் இன்னும் எஞ்சி நிற்கின்றன. கூழைக்கடா, செங்கால் நாரை, ஆள்காட்டி, குருவி, புறா, மயில், குயில்  போன்ற பல பறவைகள் குறித்து சங்க இலக்கியத்திலும் நாட்டுபுற பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. பண்டைய தமிழர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர்.  தனி மனித சுயநலத்திற்காகவும், அரசு மற்றும் பெரு முதலாளிகளின்  ஈவிரக்கமற்ற லாபத்திற்க்காகவும் நம்முடைய சூழலை கண்மூடித்தனமாக சுரண்டுகிறோம். அல்லது சுரண்ட அனுமதிக்கிறோம். மண்ணில் வாழுகிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கினால்தான் பல்லுயிர் பிரச்சனைகளுக்கு அரசு செவி சாய்க்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அது சாத்தியமற்றது. உலகமய, தாராளமயமாக்களால் சூழல் சீரழிந்து கிடக்கிறது. சூழலை மாசுபடுத்துகிற வாகனங்கள் விரைந்து செல்ல, பறக்கும் பாலங்களை அமைத்து கொடுக்கும் அரசு, இந்த பூவுலகை இயங்க செய்யும் பறவைகளுக்கு சரணாலயம் அமைத்து தருவதொன்றும் சிரமமான காரியமில்லை." என்றார் இந்நிகழ்வை ஒருங்கிணைத்த நாணல் நண்பர்கள் குழுவின் காட்டுயிர் ஆர்வலரும் ஒளிப்பட கலைஞருமான திரு. இரா. பிரபாகரன் அவர்கள். 
சுமார் மூன்றடி உயரமுள்ள கூழைக்காடா வானூர்தி ஒன்று தரையிறங்குவது போன்று அத்தனை இலகுவாக வந்திறங்கியது. பார்ப்பதற்கு கண் கொள்ள காட்சி அது. இந்த பூமியை சூடாக்குகிற செயற்கையான வானூர்திகளை வாய்பிளந்து ரசித்து கொண்டிருக்கிறோம். வானூர்தி இல்லையென்றாலும், ஏன் மனிதர்களே இல்லையென்றாலும் இந்த பிரபஞ்சம் வழக்கம் போல இயங்கி கொண்டிருக்கும். ஆனால் பறவைகளும் பூச்சிகளும் இல்லாமல் போனால் நாம் உயிர் வாழ்வது சாத்தியமற்றது. உலகில் உள்ள 80 சதவீத காடுகளை பறவைகளும் பூச்சிகளும்தான் உருவாக்கின. நம்மால் காடுகளை பாதுகாக்கவே முடியும் ஒருபோதும் உருவாக்க முடியாது. 
The Hindu - Metro Plus 07.06.2014
வண்ண வண்ண பறவைகளும் பல்லுயிர்களும் இந்த பூவுலகை அலங்கரிகின்றன. பறவைகளை காண்பதனால் மன உளைச்சல் நீங்கி, மன நிம்மதி கிடைக்கும். நெருக்கடி நிறைந்த சாலைகளும், புகை கக்கும் வாகனங்களும் நிறைந்த நகரத்திற்குள் அடைபட்டு கிடக்காமல் சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கலாம். பறவைகளை அறிந்து கொள்வதன் மூலம் பல்லுயிர் குறித்த அறிவும், சூழல் மீதான நேசமும் வளரும்.  வேளாண் பாசனம், மீன்பிடி, சலவை, கால்நடை மேய்ச்சல், நீச்சல், திருவிழா என நீர்நிலை மீது நாம் கொண்டிருந்த பாரம்பரிய உறவும் உரிமையும் நகரமயமாதலால் நசுக்கப்பட்டு, நம் நீர்நிலைகள் நம் கண்முன்னே கேட்பாரின்றி கட்டிடங்களுக்காக களவாடப்பட்டன. மீண்டும் நீர்நிலைகள் மீதான நமது உறவையும் உரிமையும் புதுபித்து கொள்ள பறவைகளை கவனிக்கிற பழக்கம் நமக்கு கைகொடுக்கும். இது நீர்நிலைகளின் அழிவை தடுக்க உதவும். இயற்கை சூழல் அழிவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு பொறுப்புமிக்க மனிதராக உங்களை மாற்றும். இதனால் ஒரு பசுமையான சூழலை அடுத்த தலைமுறைக்கு பரிசளிக்கிற பாக்கியம் உங்களுக்கு கிடைக்கலாம். மனிதனை தவிர இந்த மண்ணில் வாழுகிற எல்லா உயிர்களும் அடுத்த தலைமுறைக்கு இதைதான் செய்கின்றன. தண்ணீர், காற்று, மரம், செடி, கொடி, விலங்கு, பறவை, பூச்சி என எதுவுமில்லாத சொகுசான கான்க்ரீட் காடுகளை உருவாக்கி, நம் பிள்ளைகள் அங்கு வாழ்ந்து விடுவார்கள் என்று நம்புகிறோம். பசித்தால் வங்கியில் சேகரித்து வைத்துள்ள பணக்கட்டுகளை எடுத்து அவர்களால் ஒருபோதும் சாப்பிட முடியாது. கிட்டத்தட்ட நம் பிள்ளைகள் இயற்கை அன்னையை இழந்து நிற்கும் அனாதைகள். இந்த நேரத்தில் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது...

"இந்த பூமி முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற சொத்து அல்ல. நம் பிள்ளைகளிடம் இருந்து பெற்ற கடன்"

கடனை திருப்பி செலுத்தும் கண்ணியமான கடமை நமக்கு இருக்கிறது நண்பர்களே!

https://www.youtube.com/watch?v=dbo7di3o-v8 கிளாக்குளம் பறவைகள் தொடர்பான காணொளி செய்தியை இந்த இணைப்பில் காணலாம்.  
 நன்றி...
ஒளிப்படங்கள் 
 திரு. ந. இரவீந்திரன் & திரு. இரா. பிரபாகரன் 
மற்றும் ஊடக நண்பர்கள்
,தமிழ்தாசன்
,நாணல் நண்பர்கள் குழு 
.மதுரை 
9543663443 

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்