கூடு
அடைத்திருந்த அலமாரியை
நெடுநாள் கழித்து திறக்க
அணைத்துக்கொண்டு
உறங்கியபடியிருந்தன
மூன்று அணில்பிள்ளைகள்.
இதயத்துடிப்பு இரட்டிப்பாக
ஆவலுடன் எடுத்து
உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்கிறேன்
அதிலொன்றை.
ஈரம் காய்ந்து
ஈரொரு நொடிகளான
அதன் சருமத்தில்
அழுத்தி முத்தமிட்டேன்.
எனையறியாமல் என்கண்கள்
பிதுக்கிய நீர்த்துளி
சிறுமயிரில்பட்டுவிட
சிலிர்த்தெழுந்து மோப்பமிட்டு
மீண்டும் சுருண்டுறங்கும்
அதை கூட்டுக்குள்விட மனமில்லை.
எப்போது இறக்கிவிடுவானென்று
என்னையே பார்த்திருக்கும்
தாயணிலின் பதைபதைப்பு
நினைவுக்குவர
நீண்ட மௌனதிற்குப்பின்
அலுங்காமல் வைத்துவிட்டேன்
அதனிடத்தில்.
நம்பவே முடியவில்லை
நரைகூடிக் கிழப்பருவமெய்திய
நான்மட்டும்வாழும் இவ்வீடு
நான்கு உயிர்களுக்கு கூடானதை.
அந்த
அணில்கள் இருக்கும்வரை
நான் அனாதையில்லை.
- கவிதை நேசன்
Comments
Post a Comment