"உழவர்களைத் தேடி" 3வது நிகழ்வு - வத்திராயிருப்பு
![]() |
ஒளிப்படங்கள் - திரு. மு.பிரசன்னா & திரு. இ.சுதாகரன் |
இவர்கள் எல்லாம் யார் என்று கேட்குறீர்களா? நஞ்சை தூவி மண்ணையும் மண்ணுயிர்களையும் அடியோடு கொள்ளும் ஏகாதிபத்திய வேளாண் உற்பத்தி முறையின் அரசியலை புரிந்து கொண்டு, தாய் மண்ணை நேசித்து, பாரம்பரிய இயற்கை வழியில், புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி மண்ணை மீட்டெடுக்க அரும்பாடுபடும் பெருமக்களில் ஒரு சிறு கூட்டம். நஞ்சில்லாத உணவை நமக்கு வழங்க, இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்கள். பசுமை போராளிகள்.
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் "உழவர்களைத் தேடி" யின் மூன்றாவது நிகழ்வு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு ஊரில் 18.05.2014, ஞாயிறு அன்று நடைபெற்றது. நீர் வற்றாத இருப்பு அதனால் வத்திராயிருப்பு என்று இவ்வூருக்கு பெயர் மருவியதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பசுமையான ஊர் அது. மே 18 ஈழப் போரில் இன்னுயிர் நீத்த ஈகிகளுக்கு அஞ்சலி செலுத்தி பின் நிகழ்வு துவங்கியது. இயற்கை வழி வேளாண்மையில் ஈடுப்படும் 12 உழவர்களை மேடை ஏற்றி, பச்சை பொன்னாடை போர்த்தி, பாராட்டு இதழ் வழங்கினார் திரு.பாமயன் அவர்கள்.
நாணல் அமைப்பின் இயற்கை வேளாண் ஒருங்கிணைப்பாளர் திரு. காளிமுத்து அவர்கள் "வேளாண்மை நம் உழவர்கள் வசம் இருக்க தொடர்ந்து இயங்க வேண்டி இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வேளாண்மையை கையகப்படுத்தி, நம் நிலத்திற்கு நம்மையும் நம் பிள்ளைகளையும் கொத்தடிமை கூலி வேலையாட்களாகவோ, வாயில் காப்பாளர்களாகவோ மாற்றும் முன் நாம் விழிப்படைய வேண்டும். கடன்பட்டு சாகும் நமக்கு செலவில்லாத வேளாண் உற்பத்தி முறை இயற்கை வழி வேளாண் மட்டும்தான். இதை புரிந்து கொண்டு இயற்கை வழி வேளாண்மையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் உழவர்களைத் தேடி சென்று, உங்கள் ஊரில் உங்களை ஒரு உயர்ந்த மனிதனாக அறிமுகப்படுத்துவது இந்நிகழ்வின் நோக்கங்களில் ஒன்று" என்றார்.
"மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு உழவர்களும் வேளாண்மையில் மேதைகள்தான். ஒவ்வொருவரும் தனி சிறப்பொடு வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறார்கள். கியூபா நாட்டில் வேளாண்மை சார்ந்த அத்தனை விவாதங்களிலும் விஞ்ஞானிகளை விட உழவர்கள்தான் முன்னிறுத்தப்படுவார்கள். ஆனால் நமது நாட்டின் நிலைமையோ பசுமை புரட்சிக்கு பின் 3 இலட்சம் உழவர்கள் இதுவரை தற்கொலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு இன அழிப்புத்தான்" என்றார் நவீன இயற்கை வேளாண் அறிஞர் திரு.பாமயன் அவர்கள்.
"ஐயா பாமயன் அவர்களால் கிடைக்கும் அங்கீகாரம் மிகப் பெரியது. பல்வேறு கடினமான சூழ்நிலையில் இயற்கை வேளாண்மையில் ஈடுப்படும் எங்களுக்கு இந்த சமூக அங்கீகாரம் ஒரு இளைப்பாறுதலை தருகிறது. என்னுடைய ஒவ்வொரு விடா முயற்சிக்கும் என் மனைவியின் ஆறுதலும், அரவணைப்புமே பெருங்காரணம் என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்" என்றார் இயற்கை உழவர் திரு. பிச்சைமுருகன் அவர்கள்.
![]() |
நன்றி: பசுமை விகடன் 25.05.2014 |
"பட்டபடிப்பு படித்த நான் விவசாயம் கற்றுக் கொண்டது தலித் சமூகத்திடம் இருந்துதான். ஆனால் மாடு போல வேளாண்மையில் உழன்று திரியும் அந்த உழைக்கும் வர்க்கத்திற்கு பெரும்பாலும் இங்கே நிலமும் இல்லை உரிமையும் இல்லை. வேளாண்மையில் அதிகம் ஈடுபடுவது பெண்கள்தான். இது போன்ற வேளாண் நிகழ்வுகளில் பெண்கள் மரியாதை செய்யப்பட வேண்டும். பெண்கள் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது" என்றார் திருமதி இரா.தமிழ்செல்வி.
நாணல் அமைப்பின் "உழவர்களைத் தேடி" நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு.மு.இரா. பூபாளன் அவர்கள் பேசுகையில் "தலைவர்களை கொண்டாடி பழக்கபட்ட சமூகத்திற்கு உழவர்களை கொண்டாடும் மாற்று சிந்தனை உதிக்க வேண்டும். அந்த மாற்றம் எங்களிடம் இருந்து துவங்கட்டும். நஞ்சில்லா உணவை நமக்களிக்கும் சமூக அக்கறையுள்ள இயற்கை உழவர்களை கொண்டாடுவோம். இயற்கை வழி வேளாண்மையே இந்திய வேளாண்மை என்று நிலையை உருவாக்குவோம். தற்சார்பு நிலைக்கு தமிழகத்தை தயாரப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.
தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
9543663443
நாணல் நண்பர்கள் குழு
9543663443
Comments
Post a Comment