தொன்மதுரையின் தொல்குடிகள்

மனிதகுலம் இன்று பல்வேறு இனங்களாகவும் பல ஆயிரம் தேசிய இனங்களாகவும், பல பத்தாயிரங்களுக்கும் மேற்பட்ட சமூகங்களாகவும் வேறுபாட்டுக்கு காணப்படுகின்றன. இதில் மிக தொன்மையாக விளங்குபவர்கள் பழங்குடி மக்கள். இவர்களின் சமூகங்களும் பண்பாடுகளும் அழிக்கப்பட்டு வருகின்றன.
பழங்குடிகள் பெரும்பாலும் அரசு அமைப்பற்ற தனித்த கட்டுக்கோப்பான சமூகம், தனித்த மொழி , பண்பாடு, வாழிடம், வாழ்க்கை முறை, சமயம் போன்றவற்றை கொண்ட ஒரு குடியாக இருப்பதை காண முடியும். மனித குலத்தின் தொல் சமூக பண்பாட்டில் பல படி நிலை வளர்ச்சிகளை அறிவதற்கு இன்று சான்றாக விளங்குபவர்கள் பழங்குடிகளே. மனிதகுலம் அடைய விரும்பும் மிக உயர்ந்த சமூக விழுமியங்களும் மேலைச் சமூகத்தார் வளர்த்துக் கொண்டதாக எண்ணும் விழுமியங்களும் இந்தியாவில் பழங்குடிகளிடம் பெரிதும் காணப்படுகின்றன. சாதி படிநிலையற்ற சமூகம், ஆண்-பெண் பாலின உறவில் சமத்துவம், ஆணாதிக்கம் குறைந்த சமூக வாழ்வு, காதலித்தோ, விரும்பியோ திருமணம் செய்து கொள்ளுதல், தனிமனித சுதந்திரம், தன்னியல்பு போக்கும் மிகுதியாக கொண்டிருத்தல் போன்ற பல உகந்த கூறுகள் பழங்குடிகளின் பண்பாட்டில் வளர்ந்துள்ளன.
இந்தியாவில் இயற்கையை வியாபார பொருளாக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கோட்பாடுகள் ஊடுருவி ஒரு தலைமுறையை (25 ஆண்டுகள்) கடந்து, இன்று சந்தைப்பொருளாதாரத்தின் உச்சத்தில் நிற்கிறது. அரசு வளர்ந்த மனிதப் பேராசை, வாணிபம், நுகர்வுக் கலாச்சாரச் சீரழிவால் புவி வெப்பமயமாகி, அதனால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களால் இப்பூவுலகினில் அனைத்து உயிரினங்களும் மீள முடியா சிக்கலில் உள்ளன. இதற்கு நேர் எதிரே பூர்வகுடிகளான ஆதிவாசிகள் இன்னமும் பொதுசொத்து ஆதாரமான நிலம், நீர், வனங்களைத் தாயாக, தெய்வமாக, தங்கள் எல்லா தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஆன்மாவாகப் பார்த்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். சந்தைக்காக எதையும் உற்பத்தி செய்யாமல் தனிநபர் நலனின்றி, பொதுநலனே குறிக்கோளாகக் கொண்டு வாழும் பழங்குடிகள் சமூகத்தின் ஆணிவேர். இயற்கையில் இருந்து குறைவாக எடுப்பவர்களே கௌரவத்திற்கு உரியவர்கள்; அத்தகைய இலக்கணத்திற்கு உதாரணமான பழங்குடிகளைப் பற்றிய சரியான புரிதலும், கற்பிதங்களும் இன்றைக்கும் அனைவருக்கும் அவசியமாகின்றது.
தமிழக பழங்குடிகள்:
தமிழகத்தில் பழங்குடிகள் பலகாலமாக மலைகளிலும் சமவெளிப் பகுதிகளிலும் தனித்தொதுங்கி வாழ்ந்து வருகின்றனர். குறிஞ்சியும் முல்லையும் மனித குலத்தின் ஆதி நிலைகளை உருவாக்கிய பகுதிகளாகும். சங்ககாலம் தொட்டு பல்வேறு அரசர்களும் குறுநில மன்னர்களும் மலைகளை சிறந்த இருப்பிடங்களாக கொண்டிருந்தனர். கொல்லிமலையை ஆட்சி செய்த ஓரி, பறம்பு மலையை ஆட்சி செய்த பாரி, பொதினி (பழனி) மலையை ஆட்சி செய்த பேகன், கண்டீரம் (நீலகிரியில் உள்ள ஒரு மலைப்பகுதி) மலைப் பகுதியை ஆட்சி செய்த நள்ளி என மலைப் பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது.
தமிழக பழங்குடிகளில் பெரும்பாலோர் மலைகளில்தான் வாழ்கின்றனர். தமிழக பழங்குடிகளின் வாழ்விடமானது கிழக்கு தொடர்ச்சி மலை, மேற்கு தொடர்ச்சி மலை எனும் இரண்டு வெவ்வேறு பூகோள அமைப்புடைய மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ளது.
தமிழக பழங்குடிகளை வரையறை செய்வதிலும் சில முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிராமிய, சாதிய சமூகமாக வாழ்ந்தவர்கள். தங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரும் வரலாற்று நெருக்கடிகளை சமாளிக்க மலைப்பகுதிகளுக்கு சென்று பாதுகாப்பாக தங்கிவிட்டனர். பின்னாளில் பழங்குடிகளாக அங்கீகாரம் பெற்றுவிட்டனர். இன்றும் இவர்கள் பூர்வீகத்தில் வழிபட்ட வைணவ, சைவ கடவுளர்களை விடாமல் வழிபாட்டு வருவது கண்கூடு. இன்னும் பலவகையான ஆதி கூறுகளைக் கொண்டிருக்கின்றனர். மிகச் சில பழங்குடியினர் (காடர், இருளர், மலசர், காணிக்காரன், மலைவேடன், மலைக்குறவன் போன்றோர்) தங்கள் பூர்வீகத்திலேயே காலங்காலமாக தொடர்ந்து இடப் பெயர்ச்சி ஏதுமில்லாமல் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். ஆதனால் ஓர் ஒற்றை வரையறையின் கீழ் அணைத்து பழங்குடி சமூகங்களையும் இணைத்து பார்க்க முடியாது.
இவ்வாறு தமிழகத்திலுள்ள பழங்குடிகளின் தொன்மையை முன்வைத்து அவர்களை பின்வரும் மூன்று வகையினராக வகைப்படுத்தலாம்.
1. பல நூற்றாண்டுகளுக்கு முன் சமவெளிகளிலிருந்து மலைப்பகுதிகளுக்குக் குடியேறிவர்கள் (பழங்குடி)
2. சமவெளிகளிலிருந்து குடியேறாமல் நீண்ட நெடுங்காலமாகவே தத்தம் பகுதிகளில் மண்ணின் மைந்தர்களான வாழுபவர்கள் (முதுகுடி)
3. வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலிருந்தே இத்துனைக் கண்டத்தின் இனக்கூறுகளைத் தனித்துவமாக கொண்டிருப்பபவர்கள் (தொல்குடி)
1969 இல் இந்திய மைய அரசு 'சிலு ஆவோ குழு' ஒன்றை நியமித்து, இந்திய அளவில் மிகவும் தொன்மையான பழங்குடிகளை இனங்காணுமாறு கேட்டுக் கொண்டது. இதன்படி பின்வரும் காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்தியா முழுவதிலும் 'தொன்மையான பழங்குடி குழுக்கள் (Primitive Tribal Groups -PTG) இனங்காணப்பட்டது.
1. வேளாண்முறை தோன்றுவதற்கு முந்தைய தொழில்நுட்பத்தை மட்டுமே வாழ்க்கைக்கு ஆதாரமாக கொண்டிருத்தல்.
2. மக்கள் தொகையின் எண்ணிக்கை பெரிதும் உயராமல் இருத்தல் அல்லது குறைந்து கொண்டே செல்லுதல்
3. அதிகபட்சம் பின்தங்கிய வாழ்க்கை முறையைக் கொண்டிருத்தல்.
4. மிக குறைவான கல்வியறிவு கொண்டிருத்தல்.
இந்த அடிப்படையில் தமிழகத்தில் தொதவர், கோத்தர், குறும்பர், பனியன், இருளர், காட்டுநாயக்கன் ஆகிய ஆறு சமூகத்தவரும் 'தொன்மை பழங்குடி குழுக்கள்' என வரையறை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடியாகும். அதில் பட்டியலின பழங்குடி மக்கள் தொகை சுமார் 7.94 இலட்சமாகும். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 1.1 சதவீதம் மட்டுமே.
அடியான், அரநாடன், இரவாளன், இருளர், ஊராளி, கணியான், கம்மாரா, காட்டு நாயக்கர், காடர், காணிக்காரன், குறும்பர், குறிச்சான், குடியர் / மலைக்குடி, கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பளியர், பள்ளியன், பள்ளேயன், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக்குறவர், மலை பண்டாரம், மலை கண்டி, மலையாளி, மலை வேடன், மன்னான், முதுவன், முடுவன் / முடுகர் என தமிழக அரசின் அட்டவனைச் சாதிகள், அட்டவனைப் பழங்குடிகள் சட்டப்படி (1976) தமிழகத்தில் மொத்தம் 36 பழங்குடி சமூகங்கள் உள்ளன. கசபர், எருகுலர், ஏனாதி, நரிக்குறவர், கோடைமலைப் புலையர், குன்னுவர் உள்ளிட்ட இன்னும் சில சமூகத்தார் தமிழத்தில் உண்மையிலேயே பழங்குடியினர் நிலையில் இருப்பினும் கூட, சட்டப்பூர்வமாக இவர்கள் அட்டவணைப் பழங்குடிகள் என அறிவிக்கப்படவில்லை.
புலையர்கள் 1970களுக்கு முன் பழங்குடியாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அட்டவணைச் சாதியாக மாற்றப் பட்டனர். 1956இல் பழங்குடியினர் பட்டியலைத் திருத்தியமைத்த ஆணையின்படி தமிழகத்தில் 36 சமூகங்கள் அட்டவணைப் பழங்குடிகளாக அங்கீகாரம் பெற்றிருந்தன. அட்டவணையில் 342 ஆவது பிரிவில் சேர்க்கப்பெற்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறுவோரே பழங்குடியினர் என அங்கீகாரம் பெறுகின்றனர்.
பெரும்பாலான தமிழக பழங்குடிகள் உபரியை நாடாமல், பிழைப்பிற்கு மட்டும் உணவு ஆதாரங்களை தேடும் பாரம்பரிய பொருளாதார முறையினை (Subsistence Economy) இன்றும் கொண்டுள்ளனர். பாரம்பரிய தொழிலான வேட்டையாடுதல், காட்டுப் பொருட்களைச் சேகரித்தல் ஆகிய இரண்டையும் இன்றும் விட்டுவிடவில்லை. பெண்கள் காட்டு பொருட்களை சேகரிப்பிலும், ஆண்கள் வேட்டையிலும் ஈடுபட்டனர். இதற்க்கு அடுத்த கட்டத்தில் சேகரித்தல் வேளாண்மைக்கும், வேட்டையாடுதல் விலங்கு வளர்ப்புக்கும் வழிகோலின. ஆதலின் ஆதி உழவர்கள் பெண்களே எனலாம். பழங்குடியினர் என்றாலே அவர்கள் எல்லோரும் வேட்டையாடி உணவு சேகரிப்பவர்கள் என்று கருத கூடாது. வேட்டையாடி உணவு சேகரித்தலை ஒரு பகுதியாக கொண்டிருப்பவர்களும் உண்டு. சிறு அளவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பையும், மீன்பிடித்தலையும் வாழ்வாதாரமாகவும் கொண்டுள்ளனர். குறிஞ்சி நிலத்தில் நடைபெற்ற வேளாண்மை குறித்த சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் வாழும் சில பழங்குடிகள், கேரளம், கர்நாடக, ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களில் பரவிக் காணப்படுகிறார்கள். இந்திய பழங்குடிகள் பெரும்பாலும் திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்ட போது பழங்குடிகளின் மொழிகளோ, பண்பாடோ கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை,. இத்தகு நிலையில் பழங்குடிகளின் மொழிநிலை கவனத்திற்குரியது. பல பழங்குடிகள் இருமொழி வழக்கையும், பன்மொழி வழக்கையும் கொண்டுள்ளார்கள்.
தொன்மதுரையின் தொல்குடிகள்:
ஏறக்குறைய 2500 ஆண்டுகளாக இயங்கும் பழமையான நகராக விளங்கும் மதுரை, விடுதலைக்கு பின்னர் இன்றைய தேனி (1996), திண்டுக்கல் (1985) ஆகிய மாவட்ட நிலப்பரப்பை உள்ளடக்கிய பெரிய மாவட்டமாக மதுரை இருந்தது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை மாவட்டத்தின் மக்கள் தொகை 30.38 இலட்சமாகும். அதில் பட்டியல் பழங்குடிகளின் மக்கள் தொகை 11,096 ஆகும். இது மதுரை மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதம் மட்டுமே.
பளியர், பள்ளியன், பள்ளேயன், மலைக்குறவர், மலைவேடர், மன்னான், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் மதுரை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டிய மலைப்பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
மதுரை எரித்த பின்பு வைகையின் தென்கரையில் நடந்து சென்று விண்ணோத்தி பாறையை அடைகிற கண்ணகியின் சினம் அங்கு வாழ்ந்த கணக்குறவர்கள் ஆடிய கூத்தினை கண்டு கோபம் தணிகிறாள் என்கிறார் இளங்கோவடிகள். பொதுவாக மாரியம்மன் வழிபாடு என்பது ‘கண்ணகி வழிபாட்டின் எச்சம் தான்’ என்பது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முடிவாக உள்ளது. மதுரையினை எரித்த கண்ணகி அம்மாநகருக்குச் சாபம் விடுகின்றாள். அச்சாபத்தின் காரணமாக அடுத்த பல ஆண்டுகள் மதுரை கொடிய பஞ்சத்திற்கு உள்ளாகிறது. கண்ணகியின் சாபத்தால் வளம்குன்றி வறட்சியின் கோரப்பிடியில் சிக்குண்ட மதுரையினை மீட்க ஆயிரம் பொற்கொல்லர்களைப் பலியிட்டுக் கண்ணகியினை அமைதிப்படுத்தியதாகவும் அதன் பின்னர் மழைபெய்து மதுரை முன்புபோல வளம்பெற்றதாகவும் வாய்மொழி வரலாறு சுட்டுகின்றது. மழை பொய்த்துப்போனதால் கண்ணகியை வேண்டி, அவளை மழைத் தெய்வமாகப் பாவித்துக் கூழ்காய்ச்சிப் படைத்து வணங்கிய நிகழ்வுகள் கிராம மக்களிடையே அரங்கேறியிருத்தல் வேண்டும். இன்றைக்கும் கண்ணகி கடந்து வந்துசென்ற வழித்தடங்களில் புகழ்பெற்ற மாரியம்மன் வழிபாட்டுத்தலங்கள் இருப்பது இக்கூற்றிற்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன், மணப்பாறை வேப்பிலை மாரியம்மன், மதுரை வண்டியூர் மாரியம்மன், தேனி வீரபாண்டி மாரியம்மன், அனுமந்தன்பட்டி மாரியம்மன், க.புதுப்பட்டி மாரியம்மன், கம்பம் மாரியம்மன் கோவில் என்று, கண்ணகி பயணித்து வந்த வழிகளெல்லாம் இக்கோவில்கள் அமைந்துளன. இவற்றில் இறுதி நான்கு கோவில்களும் கண்ணகிக்கோட்டம் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களாகும். இக்கோவில் திருவிழாக்கள் யாவும் முறையே கண்ணகி விண்ணேற்றம் நிகழ்ந்த மாதமாகக் கருதப்படும் சித்திரை மாதத்தில் நடப்பது இங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
கடம்பவனமாக இருந்த காட்டுப்பகுதியில் மலைவேடர்கள் பரவி வாழ்ந்து வந்ததாகவும், தங்களின் பூர்வீக கடம்பவன காட்டை அழித்தே பாண்டியர்கள் மீனாட்சியம்மன் கோவிலையும், மதுரை நகரையும் அமைத்தார்கள் என்பதும் மலைவேடர்களிடம் கதையாக உள்ளது. அதற்க்கு ஆதாரமாக மீனாட்சியம்மன் கோவிலிலோ, மதுரை நகருக்குள் அமைந்துள்ள பழமையான கோவில்களிலோ கிடைக்கப்பெறும் வெட்டிழுத்தியல் மற்றும் கல்வெட்டு சான்றுகள் யாவும் கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கு பிறப்பட்டதாகவே இருக்கிறது. இன்றைய மதுரை நகரானது குலசேகரபாண்டியன் என்ற மன்னனால் உருவாக்கப் பெற்றது என்றும், அதற்கு முன்னர் மணவூரைத் (மணலூர் - கீழடி அருகே உள்ளது) தலைநகராகக் கொண்டு குலசேகரபாண்டியனின் முன்னோர் பாண்டிய நாட்டை ஆண்டு வந்ததாகவும் திருவிளையாடற் புராணம் படலம் 3 குறிப்பிடுகிறது.
இன்று மதுரை என்று அழைக்கப்படும் நகரத்தின் பெயர் கி.மு. 75 வரை 'கூடல்' என்பதே. பண்டைய கூடல் பகுதியை வேடர் குடித் தலைவன் அகுதை என்பவன் ஆட்சி செய்தான் என்பது வாய்மொழி வரலாறு. இன்றும் மலை வேடர்களிடம் இவ்வழக்கு உள்ளது. இந்த மக்களிடம் வழங்கும் இனவரலாற்றின்படி குறுநில மன்னனாக திகழ்ந்த அகுதை என்பவன் கூடலுக்கு கிழக்கே கொற்கையை தலைநகராக கொண்டு கடற்கரை பகுதியை ஆட்சி செய்து வந்த பூதப்பாண்டியனை வென்றுள்ளான். மேலும் கூடலுக்கு வடக்கே ஆட்சி செய்து வந்த ஆயர்குல தலைவன் 'முதலாம் எவ்வி' எனும் குறுநில மன்னனையும் வென்றுள்ளான்.
கூடலுக்கு தெற்கே அதிகன் என்ற வேடர் குல அரசன் இன்றைய திருவிதாங்கூர், சதுரகிரி மலை, காந்த மலை, முதலான பகுதிகளை பெரும் படையுடன் ஆண்டு வந்தான். அவனுடன் அகுதை போரிடவில்லையாம். இருவரும் வேடர் இனத் தலைவர்கள் என்பதால் ஒருவர் மீது ஒருவர் போர் தொடுக்காமல் வேடர் குடியின் ஆட்சியைப் போற்றி வந்தார்களாம்.
மதுரை மீனாட்சி கோயிலில் வேடர்களுக்கென்று தனித்துவமான பங்குண்டு. கோயிலின் அட்ட சக்தி மண்டபத்திற்கு அடுத்துள்ளது 'வேட மண்டபம்' ஆகும். இம்மண்டபத்தின் இருபுறமும் ஆறு அடி உயரம் கொண்ட வேட்டுவச்சி, வேடுவர் சிலைகள் உள்ளன. வேடுவர்களின் உரிமை காட்டுவதாகவே இம்மண்டபம் அமைந்துள்ளது. வில் அம்புகளை கொண்டு வேட்டையாடுவதால், இவர்களை வில்லர்கள், வில்வேடர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மதுரை வில்லாபுரம் என்பது முன்பு வில்லர்புறமாக அழைக்ப்பட்டகாகவும், அப்பகுதியில் வேடர்கள் பரவி இருந்ததாகவும், அதற்கு ஆதாரமாக அப்பகுதியில் பாரம்பரியமாக சொந்த நிலங்கள் இன்றும் மலைவேடர்களிடம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பழனி முருகன் கோயிலில் வேடக்குல ஆய் மன்னனுக்குரிய மரியாதையை இன்றும் திருவிழாக்களின் போது வேட நாயக்கர்கள் பெறுகிறார்கள்.
அதிகன் வழி வந்தோர் கேரளத்திலும், அகுதை வழி வந்தோர் தமிழகத்தில் மதுரை, பழனி, உள்ளிட்ட பகுதிகளிலும் வாழ்கின்றனர். எனினும், அனைவரும் வேடர், மலைவேடர் எனும் பொது அடையாளத்தை கொண்டுள்ளனர்.
மதுரை மாவட்ட மலைவேடர்கள் அழகர் கோயில் பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில்தான் முதல் மொட்டை அடிப்பார்கள். மலை வேடர்களின் குடும்ப தெய்வங்கள் எல்லாம் கையில் வில், அம்பு ஏந்தியவர்களாய் இருக்கின்றனர். வேடர் குலத்தவர் கண்ணப்ப நாயனாரின் வழி வந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு வருடமும் தை மாதம் வளர்பிறையில் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவா ஆலயங்களில் குருபூசை செய்வார்கள். திருப்பரங்குக்குன்றத்தில் மலைவேடர்களுக்கு சொந்தமான வேடர் மடத்திற்குப் பங்குனி மாதம் முருகன் எழுந்தருளுவார். இது மரபாகும். பல ஊர்களிலிருந்தும் மலைவேடர்கள் கலந்து கொள்வார்கள். கண்ணப்ப குல வேடர்களே மலைவேடர்கள் என்பதால் இந்த உரிமை இவர்களுக்கு கிடைக்கிறது. மதுரை அருகேயுள்ள பறம்பு (பிரான்மலை) மலையை பாரி எனும் கடையெழு வள்ளல் ஆட்சி செய்து வந்தான். இம்மன்னனும் மலைவேடர் என்று கூறுகிறார்கள். (தகவல்: ச.தவமணி, மண்ணாடிமங்கலம், வாடிப்பட்டி, மதுரை)
பழங்குடி மக்கள் சமூகத்தால், பொருளாதாரத்தால், கல்வியால் பின்தங்கியவர்கள் என்ற கருத்துருவாக்கம் பழங்குடி மக்களின் வாழ்வியல் கூறுகளை, பண்புகளை, கீழ்மையானது என்று தவறாக கருத தூண்டுகிறது. அவர்களை வந்தடையும் சமூக, பொருளாதார, கல்வி யாவும் அவர்களின் வரலாற்றையோ, பண்பாட்டையோ,தொழில்நுடப்பத்தையோ, இருப்பிடத்தையோ பேணுவதற்கு பயன்படுவதாக இல்லை. மாறாக புதிய உலகமய பொருளாதார அரசமைப்பில் வாழும் ஒரு பொது கூலி குடிகளாகவே அவர்களை மாற்றுகிறது. சமவெளி மக்களுக்கு வழங்கப்படும் கல்வியின் நோக்கம் என்னவாக இருக்கிறது? எதாவது பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு (கூலிக்கு) நம் பிள்ளைகளை சேர்ப்பதற்கான ஒரு கருவியாக இருக்கிறது. பழங்குடி மக்களுக்கென்று ஏதேனும் சிறப்பு கல்வித்திட்டம் உள்ளதா? அப்படிப்பட்ட சூழலில் அந்த கலவி எந்த வகையில் பழங்குடி மக்களை பாதுகாக்கும்? பழங்குடி மக்கள் மிக்க அறிவுடையவர்கள். இன்றைய சூழலில் அவர்களுக்கு தேவை எழுத்தறிவும், அரசியல் அறிவும்தான். இந்த இரண்டையும் அவர்கள் பெற்றுவிட்டால், அவர்களின் சமூக பாய்ச்சல், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க முடியாது.
புலிகள் காப்பகம், தேசிய காட்டுயிர் பூங்கா, காப்பு காடு என்ற பெயரில் பழங்குடி மக்களை, அரசாங்கம் மலைகளை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக செய்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து இன்றுவரை உள்ள அரசாங்கம் பழங்குடி மக்களின் வாழ்வையும், சூழலையும் வதைத்துள்ளது என்பதில் மாறுபாடு கிடையாது. பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தால், வேட்டையாடுவார்கள், காட்டின் பல்லுயிர் சூழல் அழிந்து போகும் என்ற கருத்துருவாக்கத்தை தொண்டு நிறுவனங்கள் மூலம் முதலாளிய வர்க்கம் தொடர்ச்சியாக செய்து வருகிறது. அப்படி செய்வதன் மூலம் தான் பழங்குடிகளை வெளியேற்றிவிட்டு தேக்கு காடுகள், தேயிலை தோட்டங்கள், தாது சுரங்கங்கள், சூழல் சுற்றுலா என்ற பெயரில் காடுகளை அழித்து பெரு லாபம் ஈட்ட முடியும். பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தால், அவர்கள் இந்த திட்டங்களுக்கு எதிராக போராடுவார்கள் என்பதால் பழங்குடிகளை வெளியேற்றும் நடவடிக்கையை முதலாளிய வர்க்கம் தங்களின் எடுபிடியான அரசுகளை கொண்டு பணிக்கும்.
பளியர்கள்:
பளியர் 'பழையோர்' (ஆதிமக்கள்) என்றே பெயர் பெற்றிருந்தனர். கால ஓட்டத்தில் பழையோர் > பழியர் என்றாகிவிட்டது. பழையர் பற்றிய குறிப்புகள் அகநானூற்றிலும் (201.6.7,;331.5) காணப்படுகின்றன. பழனிமலைக்குரிய பழனியன் 'பளியர்' என்று மருவி வந்துவிட்டது என்பது இன்னொரு கருத்தாகும்.
பழனி மலையின் மேற்பள்ளதாக்கிலும் வருசநாட்டுப் பள்ளத்தாக்கில் ஏலாக்காய் மலையிலும் காடுகளிடையே வாழ்கின்றனர். ஈத்தை புல்லால் வேயப்பட்ட குடிசைகளைத் தவிர மரங்களின் மேல் மேடைகள் அமைத்தும், குகைகள், பாறைகளின் அடிப்பகுதி ஆகிய இடங்களில் தற்காலிகமாக தங்கியும் வாழ்வார்கள்.

கடந்த 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பளியர் இன மக்களின் எண்ணிக்கை வெறும் 3052 ஆகும். இன்றுள்ள பழங்குடியின மக்களும் உலகமயத்திற்குள் சிக்குண்டு, தங்களின் வாழ்வியல் தொன்மங்களை, மொழியை, பண்பாட்டை, அடையாளத்தை இழந்து வருகின்றனர். பிறப்பால் பழங்குடியாராயினும், அவர்கள் எதோ ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்காக்க சுரண்டப்படும் பொது கூலிகளாகவே அரசால் வளர்க்கபப்டுகிறார்காள்.
பளியர்களின் குலதெய்வமாக பளிச்சியம்மன் விளங்குகிறாள். கருப்பணசாமி, அக்காமார் - தங்கைமார், சீலைக்காரி, மாரியம்மன் ஆகிய தெய்வங்களையும் வழிபடுகின்றனர். வீரபாண்டி மாரியம்மன் கோவிலுக்கு காப்பு காட்டும் வழக்கம் பளியர்களிடையே காண முடிகிறது.
பளியர்கள் திருமணம் அவர்களுக்கேயுரிய பாரம்பரிய முறைப்படி நிகழ்த்தப்படுகிறது. முன்பு வேங்கை மரத்தினடியில் பளிச்சியம்மனைச் சாட்சியாக வைத்து வள்ளிக்கொடியில் ஆண் பெண்ணின் கழுத்தில் தாலிகட்டும் வழக்கம் இருந்து வந்தது.
பழங்குடி சமூகங்களின் தலைவனுக்கு சில சலுகைகளும், தகுதியும் அதிகமாக இருக்கும். பளியர் தலைவன் இரவில் தூங்கும் போது இருபுறம் கணப்புப் (நெருப்பு) போட்டுக் கொண்டு அவற்றிற்கிடையே படுத்துறங்கும் உரிமை கொண்டவன். மற்றவர்கள் ஒரு பக்கம் மட்டுமே கணப்பு போட்டுக் கொள்ளலாம். மேற்கூறிய சலுகையில் தொடர்ச்சியாக பளியர் தலைவன் மட்டும் இரண்டு மனைவிமார்களுடன் வாழும் உரிமை கொண்டவனாகிறான். கணப்பு அணையாமல் தலைவன் நிம்மதியாக தூங்குவதற்கு இரண்டு மனைவிமார்களும் முறைவைத்து மாறி மாறி கணப்பினைக் காத்து வருவார்கள்.
அநீதியால் கொல்லப்பட்ட தன் கணவனின் மரணத்திற்கு நீதிவேண்டி முறையிடுகிறாள் கண்ணகி. சினம் தணியாத கண்ணகி மதுரை மாநகர் தீக்காடாகிறது. மதுரையை எரித்தபின் கண்ணகி அங்கிருந்து மேற்கே வைகை ஆற்றின் தென்கரை வழியாக 14 நாட்கள் நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணேத்திப்பாறை (தற்போதைய வண்ணாத்திபாறை) வந்தடைகிறாள். இங்குவாழ்ந்த குன்றக்குறவர்கள் ஆடிய குறவைக் கூத்தினைப்பார்த்து அவளது கோபம் சற்றுத்தணிகிறது. அக்கானவர்கள் கேட்டதற்கிணங்கத் தன்வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணிலிருந்து தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து பூப்பல்லக்கில் ஏற்றி விண்ணோக்கி அழைத்துச்சென்றதாகவும், இக்காட்சிகளைக் கண்ட மலைவாழ் மக்களான கானவர்கள் மலைவளம் காணவந்த சேரன் செங்குட்டுவனிடம் கூற அவன் இமயம்வரை சென்று கல்லெடுத்து கனகவிசயர் தலையிலேற்றிக் கொணர்ந்த கல்லில் கண்ணகிக்கு சிலையெடுத்து கோவில்கட்டுவித்தான் அதுதான் மங்கலதேவி கண்ணகிக்கோட்டம் எனவும் இளங்கோ விவரிக்கின்றார். இக்கோவில் தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் கூடலூருக்கு தெற்கே பளியன் குடியிலிருந்து 5000 அடி உயரத்தில் விண்ணேந்திப் பாறையில் அமைந்துள்ளது என பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் நிறுவினார்.
பளியன்குடி – மலைவாழ் பளியர் இன மக்கள் வாழும் தொன்மையான பகுதியாகும். இது மிகச்சரியாகக் கண்ணகி கோட்டத்திற்குக் கீழே அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியாகும். இம்மக்களின் வாழ்வாதாரம் வண்ணாத்திப்பாறை, வேங்கக்காடு என்கின்ற மலைப்பகுதிகளேயாகும். சிலப்பதிகாரம் சுட்டும் குன்றக்குறவர் இவர்களே என்று துணிவதற்குப் பல சான்றுகள் உள்ளன. இம்மக்களது குலதெய்வம் பளிச்சியம்மன். பளிச்சியம்மனுடைய தொன்மக் கதை கண்ணகியுடன் தொடர்புடையதாக உள்ளது. தவறான தீர்ப்புக்காக மதுரையை எரித்த கண்ணகி, அங்கிருந்து நடைபயணமாக கூடலூர் பளியங்குடியை அடைகிறார். மாலை நேரத்தில் அங்குள்ள மலையில் ஏறுகையில் எதிர்வரும் பளிங்கர் இனப்பெண் தன் சேலையை கிழித்து தீப்பந்தமாக்கி தந்தார். மிருகங்கள் உலாவும் மலையில் தன்னை காக்க நினைத்த பெண்ணை பளிச்சியம்மன் தெய்வமாகி, மக்களை காக்குமாறு கண்ணகியம்மன் வரம் தந்தார் என்ற தொல்கதைகளும் அம்மக்களிடையே புழங்குகிறது. கி.பி.11ஆம் நூற்றாண்டு வரை கண்ணகி கோவில் ‘பளியர்’ என அழைக்கப்படும் மன்னர்களால் தொடர்ந்து தினசரி பூசை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இக்கோவில் வளாகத்திலேயே உள்ளது.
பளியர்களின் வேட்டை முறை பலவகையானது. அதில் ஒண்டு தண்ணீர் வைத்துப் பிடிப்பது. இது ஒரு எளிய உத்தி முறையாகும். வேட்டைக்குச் செல்லும் பளியர்கள் தலையில் சட்டி நிறையத் தண்ணீரை சுமந்து செல்வார்கள். கோடை காலத்தில் தண்ணீரைப் பாறையில் உள்ள பள்ளத்தில் ஊற்றிவிட்டு அருகில் உள்ள புதரில் மறைந்து கொள்வார்கள். தண்ணீரை குடிக்க வரும் மான், காட்டுப் பன்றி, மயில், எதுவாயினும் பிடித்துவிடுவார்கள். குழிவெட்டி தழைகளை அதன் மீது மூடி, பெரிய காட்டு விலங்குகளை பிடிக்கின்றனர். முருகனின் மனைவியாகிய வள்ளி தங்கள் சமூகத்தவர் என்று பெருமிதத்துடன் கூறுகின்றார்கள்.
காடு பொருட்களை சேகரித்தல்தான் இன்று பளியர்களின் வாழ்வியலில் பொருளாதாரமாக விளங்குகிறது. அதனை வனச்சிறு பொருட்கள் அல்லது சிறுவன மகசூல் என்பர்.
தேன் கூட்டின் அருகில் செல்லும் முன்பு ‘தினுத்துப்பச்சிலை’ என்ற மூலிகையினை உடல் முழுவதும் பூசிக்கொண்டு செல்கின்றனர். அவ்வாறு செய்கையில் அந்த மூலிகையில் இருந்து வெளிப்படும் நெடியான மணம் தேனீக்களுக்கு ஒருவித தற்காலிக மயக்கத்தினை உண்டாக்கி கூட்டை விட்டுக் கலையச் செய்கிறது. பளியர்கள் எளிதாக ஒரு துளியும் வீணடிக்காமல் தேனைச் சேகரிக்கின்றனர். தேனீக்களில் ஒன்று கூட மடிவதில்லை. சற்று நேரம் கழித்துப் பறந்து செல்கின்றன.
மூலிகை, உணவு வாசனைத் திரவியம், சாயம், தீவனம் போன்ற பயனுள்ள தாவரங்கள், மேலும் பிசின், நுரை பொருள் தரும் தாவரங்கள், நார் செய்ய உதவும் தாவரங்கள், காட்டு
விலங்கிடமிருந்து காக்கும் வாசனை தாவரங்கள், பீடி இலைகள், தேன், மெழுகு ஆகிய காடுபொருட்களை சேகரிப்பதே சிறுவன மகசூல் என்பர். பழங்குடி மக்களின் பொருளாதாரத்தில் வனச்சிறு பொருட்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. தே.வி.தாமஸ், ஜேம்ஸ் (1999) இருவரும் மேற்கொண்ட ஆய்வின்படி சதுரகிரி மலையில் வாழும் பளியர்களின் ஆண்டு வருமானம் ரூ. 11,000 முதல் ரூ. 13,000 வரை உள்ளது. இந்த வருவாயில் 65% - 80% வரையிலான வருமானம் வனச்சிறு பொருட்களை சேகரிப்பதன் மூலமே கிடைக்கிறது. மேலும் சதுரகிரி மலை பளியர்களின் ஆண்டு முழுவதுமான வேலை நாட்களில் 70% நாட்கள் வனச்சிறு பொருட்கள் சேகரிப்பதில் செலவாகின்றன.
இன்றைய நிலை:
மதுரை எழுமலை, தொட்டப்பநாயக்கனூர் பகுதிகளில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த பளியர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இவர்கள் மலைப்பகுதிகளில் இருந்து தமிழக அரசால் வலுக்கட்டாயமாக கீழிறக்கப்பட்டு மலையடிவார சமவெளியில் குடியமரத்தப்பட்டார்கள். அவர்கள் பூர்வீகமாக இருந்து வந்த மலை குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. மலை காடுகளை விட்டு அவர்கள் அகற்றப்பட்டார்கள். காட்டுக்குள் அவர்கள் நுழைவதை சட்டம் போட்டு தடை செய்தார்கள். அவ்வவ்ப்போது காட்டுக்குள் மரங்களை வெட்டினார்கள் என்று போலியாக வழக்குகளை போட்டு, கைது செய்து அவர்களை மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது வனத்துறை. சமவெளிக்கு வந்த பளியர் இன மக்கள் பிழைப்பதற்கு எந்த நாதியுமில்லை. அதற்க்கான உருப்படியான எந்த வழியையும் அரசுகள் அம்மக்களுக்கு செய்து தரவில்லை.
வேளாண்மை செய்வதற்கோ, ஆடுகளை மேய்ப்பதற்க்கோ சமவெளியில் அவர்களுக்கு இடமில்லை. எந்த நிறுவனத்திலும் வேலை செய்வதற்கான அனுபவமோ, கல்வி தகுதியோ அவர்களிடமில்லை. ஏற்கனவே சாதிய அடுக்குகளை கொண்ட சமவெளியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை காட்டிலும் கீழ்நிலைக்கு இந்த மக்களை தள்ளியது சாதிய அமைப்புமுறை. பளியர்கள் வளர்க்கும் ஆடுகள், புற்கள், களைகள் முளைத்து சும்மா கிடக்கும் இன்னொருவரின் நிலத்திலுள்ள செடிகளை மேய்ந்துவிட்டது. அதை அறிந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள், பளியர்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதுதான் பளியர்களின் இன்றைய சமவெளி வாழ்நிலையாக இருக்கிறது.
வள்ளிக்கிழங்கு எடுப்பது, தேன் எடுப்பது, மூலிகை சேகரிப்பது என இதுதான் பளியர்களுக்கு தெரிந்த வேலைகள். அவர்கள் காட்டின் பூர்வகுடிகள். ஏறக்குறைய 100க்கும் குறைவான பளியர் இன மக்கள் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
பழங்குடிகள் காடுகளுக்குள் செல்லலாம், அவர்கள் காட்டு பொருட்களை சேகரிக்கலாம், மீண்டும் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த வனப்பகுதியில் குடியேறலாம் என 2006 வன உரிமை சட்டம் அங்கீகரிக்கிறது . இதன் அடிப்படையில் பளியர்கள் மீண்டும் தங்களின் பூர்வீக காட்டு பகுதியில் குடியேறுவதற்கான கோரிக்கைகளை அரசுகளுக்கு தொடர்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 2006 வன உரிமை சட்டத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவே இல்லை. ஆனால் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்கள் வனப்பகுதியில் ஏற்பட்டால், பழங்குடி மக்கள்தான் அந்த காட்டு தீயை கட்டுப்படுத்தும் நுட்பம் அறிந்தவர்கள். அதற்கு மட்டும் பழங்குடி மக்கள் அரசு நிர்வாகத்திற்கு தேவைப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், காட்டை பாதுகாப்பது பழங்குடிகள்தான்.
பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தவரை எந்த உயிரினமும் அழியும் நிலைக்கு செல்லவில்லை. தேயிலை, தேக்கு, தைலம், ரப்பர் தோட்டங்கள் வளரவில்லை. இரும்பு, பாக்சைட் போன்ற தாது சுரங்கங்கள் தோண்டப்படவில்லை. தொழிற்சாலைகள், விருந்தினர் மாளிகை, ஆன்மீக யோகா மையங்கள் காட்டுக்குள் முளைக்கவில்லை. பழங்குடி மக்கள் காட்டில் இருந்தவரை சமவெளிக்கு ஆறு வந்தது, ஆறு வந்ததும், சோறு வந்தது. சோறு வந்ததும், ஊரு வந்தது. பழங்குடிகள் காட்டை பாதுகாத்தனர். காடு அவர்களை பாதுகாத்தது.
காட்டை பாதுகாப்பதற்கும், ஆறுகளை மீட்டெடுப்பதற்கும் ஒரே வழி அரசு நிர்வாகத்திடமிருந்தும், தொண்டு நிறுவங்களிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் காட்டை போராடி பெற்று, பழங்குடி மக்களின் கைகளில் நிரந்தரமாக ஒப்படைப்பதுதான். காட்டையும், ஆற்றையும், காற்றையும் பாதுகாக்க பழங்குடி மக்களின் உரிமைக்காக நாமும் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
2006 வன உரிமை சட்டத்தின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள பளியர் இன மக்கள், மீண்டும் தங்களின் பூர்வீக இடமான வனப்பகுதியில் குடியேற வேண்டுமென்கிற அவர்களின் நியாமான கோரிக்கைக்கு, போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டியது நமது கடமையாகும்.
தமிழ்தாசன்
நாணல் நணபர்கள் இயக்கம்
துணை செய்த நூல்கள்:
தமிழக பழங்குடிகள்
தன்ராஜ் - கட்டுரை (கீற்று இணையதளம்)
முனைவர் ஆ.பிரபு - கட்டுரை (வல்லினம் இணையதளம்)
மதுரை எழுமலை, தொட்டப்பநாயக்கனூர் பகுதிகளில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்த பளியர் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 1980 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இவர்கள் மலைப்பகுதிகளில் இருந்து தமிழக அரசால் வலுக்கட்டாயமாக கீழிறக்கப்பட்டு மலையடிவார சமவெளியில் குடியமரத்தப்பட்டார்கள். அவர்கள் பூர்வீகமாக இருந்து வந்த மலை குடியிருப்புகள் இடிக்கப்பட்டது. மலை காடுகளை விட்டு அவர்கள் அகற்றப்பட்டார்கள். காட்டுக்குள் அவர்கள் நுழைவதை சட்டம் போட்டு தடை செய்தார்கள். அவ்வவ்ப்போது காட்டுக்குள் மரங்களை வெட்டினார்கள் என்று போலியாக வழக்குகளை போட்டு, கைது செய்து அவர்களை மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது வனத்துறை. சமவெளிக்கு வந்த பளியர் இன மக்கள் பிழைப்பதற்கு எந்த நாதியுமில்லை. அதற்க்கான உருப்படியான எந்த வழியையும் அரசுகள் அம்மக்களுக்கு செய்து தரவில்லை.
வேளாண்மை செய்வதற்கோ, ஆடுகளை மேய்ப்பதற்க்கோ சமவெளியில் அவர்களுக்கு இடமில்லை. எந்த நிறுவனத்திலும் வேலை செய்வதற்கான அனுபவமோ, கல்வி தகுதியோ அவர்களிடமில்லை. ஏற்கனவே சாதிய அடுக்குகளை கொண்ட சமவெளியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை காட்டிலும் கீழ்நிலைக்கு இந்த மக்களை தள்ளியது சாதிய அமைப்புமுறை. பளியர்கள் வளர்க்கும் ஆடுகள், புற்கள், களைகள் முளைத்து சும்மா கிடக்கும் இன்னொருவரின் நிலத்திலுள்ள செடிகளை மேய்ந்துவிட்டது. அதை அறிந்த இடத்திற்கு சொந்தக்காரர்கள், பளியர்களை அடித்து விரட்டியிருக்கிறார்கள். இதுதான் பளியர்களின் இன்றைய சமவெளி வாழ்நிலையாக இருக்கிறது.
வள்ளிக்கிழங்கு எடுப்பது, தேன் எடுப்பது, மூலிகை சேகரிப்பது என இதுதான் பளியர்களுக்கு தெரிந்த வேலைகள். அவர்கள் காட்டின் பூர்வகுடிகள். ஏறக்குறைய 100க்கும் குறைவான பளியர் இன மக்கள் மதுரை மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
பழங்குடிகள் காடுகளுக்குள் செல்லலாம், அவர்கள் காட்டு பொருட்களை சேகரிக்கலாம், மீண்டும் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த வனப்பகுதியில் குடியேறலாம் என 2006 வன உரிமை சட்டம் அங்கீகரிக்கிறது . இதன் அடிப்படையில் பளியர்கள் மீண்டும் தங்களின் பூர்வீக காட்டு பகுதியில் குடியேறுவதற்கான கோரிக்கைகளை அரசுகளுக்கு தொடர்ச்சியாக வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 2006 வன உரிமை சட்டத்தை மதுரை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவே இல்லை. ஆனால் காட்டுத்தீ போன்ற இயற்கை பேரிடர்கள் வனப்பகுதியில் ஏற்பட்டால், பழங்குடி மக்கள்தான் அந்த காட்டு தீயை கட்டுப்படுத்தும் நுட்பம் அறிந்தவர்கள். அதற்கு மட்டும் பழங்குடி மக்கள் அரசு நிர்வாகத்திற்கு தேவைப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், காட்டை பாதுகாப்பது பழங்குடிகள்தான்.
பழங்குடி மக்கள் காடுகளில் இருந்தவரை எந்த உயிரினமும் அழியும் நிலைக்கு செல்லவில்லை. தேயிலை, தேக்கு, தைலம், ரப்பர் தோட்டங்கள் வளரவில்லை. இரும்பு, பாக்சைட் போன்ற தாது சுரங்கங்கள் தோண்டப்படவில்லை. தொழிற்சாலைகள், விருந்தினர் மாளிகை, ஆன்மீக யோகா மையங்கள் காட்டுக்குள் முளைக்கவில்லை. பழங்குடி மக்கள் காட்டில் இருந்தவரை சமவெளிக்கு ஆறு வந்தது, ஆறு வந்ததும், சோறு வந்தது. சோறு வந்ததும், ஊரு வந்தது. பழங்குடிகள் காட்டை பாதுகாத்தனர். காடு அவர்களை பாதுகாத்தது.
காட்டை பாதுகாப்பதற்கும், ஆறுகளை மீட்டெடுப்பதற்கும் ஒரே வழி அரசு நிர்வாகத்திடமிருந்தும், தொண்டு நிறுவங்களிடமிருந்தும், பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தும் காட்டை போராடி பெற்று, பழங்குடி மக்களின் கைகளில் நிரந்தரமாக ஒப்படைப்பதுதான். காட்டையும், ஆற்றையும், காற்றையும் பாதுகாக்க பழங்குடி மக்களின் உரிமைக்காக நாமும் போராடுவதை தவிர நமக்கு வேறு வழியில்லை.
2006 வன உரிமை சட்டத்தின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள பளியர் இன மக்கள், மீண்டும் தங்களின் பூர்வீக இடமான வனப்பகுதியில் குடியேற வேண்டுமென்கிற அவர்களின் நியாமான கோரிக்கைக்கு, போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டியது நமது கடமையாகும்.
தமிழ்தாசன்
நாணல் நணபர்கள் இயக்கம்
துணை செய்த நூல்கள்:
தமிழக பழங்குடிகள்
தன்ராஜ் - கட்டுரை (கீற்று இணையதளம்)
முனைவர் ஆ.பிரபு - கட்டுரை (வல்லினம் இணையதளம்)
தொன்மையான நம் ஆதி தமிழரின் வரலாறு அறிந்தது மகிழ்ச்சி
ReplyDelete