விவசாயிகளும் துப்பாக்கி சூடும்
துப்பாக்கி சூட்டில் மத்திய பிரதேசத்தில் போராடிய 5 விவசாயிகள் பலி.
=============================================
விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்? இதுவரை கடன்சுமையால், மூன்று இலட்சம் விவசாயிகள் கடந்த 20 ஆண்டுகளில் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என்று தேசிய குற்றப்பதிவு ஆணையம் புள்ளிவிபரம் தருகிறது. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு இரண்டு விவசாயிகள் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிபரம். இந்த தற்கொலைக்கு காரணம் கடன் சுமையே என்கிறது தேசிய குற்றப்பதிவு ஆணையம். இந்த கடன்சுமை என்பது பசுமை புரட்சிக்கு பிறகு ஏற்பட்டது.
ஏன் எப்போதிருந்து விவசாயிகளுக்கு கடன்சுமை ஏற்படுகிறது?
மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி செய்து கொண்டிருந்த உழவர்களை, பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்திற்கு உற்பத்தி செய்ய சொன்னது அரசாங்கம். அதற்கு பெயர்தான் பசுமை புரட்சி. குறிஞ்சியில் மூங்கில் நெல், வெண்ணெல், முல்லையில் சோளம், கம்பு, வரகு, பருப்பு உள்ளிட்டவைகளும், மருதத்தில் சம்பா, பூங்கார், வாழை, கரும்பு உள்ளிட்டவைகளும் வேளாண்மை செய்யப்பட்டு வந்தன. நிலத்திற்கேற்ப (திணை) வேளாண்மை என்ற நிலை மாற்றப்பட்டு, அணைத்து நிலங்களிலும் பன்னாட்டு நிறுவனங்களின் உரம், பூச்சிக் கொல்லிகளை தாங்கும் குட்டை ரக நெல்களை வேளாண்மை செய்யும் நிலை மாற்றப்பட்டது.
பசுமை புரட்சிக்கு பின்பு டிராக்டர் கம்பெனிகள், உர கம்பெனிகள், பூச்சி (உயிர்) கொல்லி, விதை கம்பெனிகள் அதிக அளவில் இந்தியாவிற்குள் வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் உரத்தை, நஞ்சையும் தாங்கும் தன்மை கொண்ட பயிரினங்கள் மட்டுமே பயிரிடப்படும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். காரணம் அந்த பயிர் ரகங்களுக்கு மட்டுந்தான் மானியம் கொடுத்தது அரசு.
மரபாக விவசாயிகளிடம் இருந்த பாரம்பரிய உழவு மாடு, விதை, இயற்கை உரம், பூச்சி கொல்லிகள், கருவிகள், தொழில்நுட்பம் அனைத்தும் பறிக்கப்படுகிறது அல்லது பயனற்று போகிறது.
இனி விவசாயம் செய்ய வேண்டுமென்றால் உரம், பூச்சிக் கொல்லிகள், டிராக்டர் என அனைத்துக்கும் கம்பெனிகளை சார்ந்தே இருக்க வேண்டுமென்கிற நிலைக்கு விவசாயிகளை அரசு தள்ளுகிறது. விவசாயம் செய்ய வேண்டுமென்றால் உரம், பூச்சி கொல்லி, விதை என இது அத்தனையும் ஒரு விவசாயி வாங்க வேண்டும். அதற்கு வங்கியில் விவசாயி கடன் வாங்க வேண்டும்.
பன்னாட்டு கம்பெனிகளுக்கு வங்கி நேரடியாக பணத்தை கொடுத்துவிட்டு, அந்த தொகையை விவசாய கடன் என விவசாயிகளின் மீது சுமத்துகிறது. விவசாய மானியம் என்ற பெயரிலும் கம்பெனிகளுக்கு அரசு நேரடியாக நம் வரிப்பணத்தை கொட்டி கொடுக்கிறது. அப்படி என்ன பெரிய செலவாகிடும் ன்னு நினைக்கிறீங்களா? சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி விதை ஏறக்குறைய ரூ.40,000 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதே போல உரம், பூச்சி கொல்லி என அதிக செலவு செய்கிற விவசாயிக்கு தான் விளைவித்த பொருட்களுக்கான விலையை தீர்மானிக்கவும் முடியவில்லை.
இந்நிலையில் விளைச்சல் குறைவாக இருக்கும் போது சந்தையில் விளைப்பொருட்களின் விலை அதிகமாக இருக்கிறது. விளைச்சல் அதிகமாக இருக்கிற போது விளைப்பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது. சந்தை விவசாயிகளிடமில்லை, அது தரகு முதலாளிகளின் கைகளில் இருக்கிறது. இவ்வளவு கடன்பட்டு வேளாண்மை செய்கிற விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை. அவர்கள் மேலும் மேலும் நட்டமடைகிறார்கள். பின் குழந்தைகளின் பள்ளி செலவு, குடும்ப செலவு என கடன் வாங்கும் நிலைக்கு மேலும் மேலும் தள்ளப்படுகிறார்கள். கடன்கட்டாத நிலையில் வங்கி அதிகாரிகள் மானக்கேடாக விவசாயிகளை நடத்துகிறார்கள். தன்மானம் போகிறதே என்ற வேதனையில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறான். தன்மானத்தை அடகு வைத்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பி போய் பிழைத்து கொள்ளலாம் அல்லது தலைமறைவாக வாழலாம் என விவசாயிகள் நினைப்பதில்லை. அவர்களை பொறுத்தவரை சொந்த மண்ணில் மானமிழந்து மண்டியிட்டு வாழுவதை விட, தன்மானத்தோடு சாவது மேல் என கருதுகிறார்கள்.
மானத்தோடு வாழ வேண்டுமென்றால், அவர்கள் இந்த இழிநிலைக்கு எதிராக போராட வேண்டும். இதை எல்லாம் அரசிடம் போய் முறையிடலாம் என்றால் அவர்களால் போராட முடியவில்லை. உதாரணமாக மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து போராடுகிறார்கள் என்றால் பாதிப்பு நோயாளிகளுக்குதான். வங்கி அதிகாரிகள் போராடுகிறார்கள் என்றால் பாதிக்கப்படுவது வாடிக்கையாளர்கள்தான். ஆனால் விவசாயிகள் போராடுகிற போது, அவர்களின் பயிர்களுக்கு தண்ணி பாய்ச்சவோ, மாடுகளுக்கு தீவனம் வைக்கவோ ஆளில்லாமல் போகிறது. ஆக போராடினாலும் விவசாயி பாதிக்கப்படுகிறான். அதனால் விவசாயிகள் ஒர் வர்க்கமாக திரண்டு போராட்டத்திற்கும் வர முடியவில்லை. இன்னொரு பக்கம் அவர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம், கம்பெனிகளுக்கு, பெரிய பெரிய முதலாளிகளுக்கும் பல லட்சம் கோடியில் வரி சலுகை கொடுக்கிறது. தமிழகத்தில் ஓவ்வொரு நாளும் குறைந்தது 50 போராட்டங்கள் விவசாயிகளுக்காக நடக்கிறது. எந்த போராட்டத்திற்கும் தீரவில்லை.
இப்போது விவசாயிகள் முன் இருப்பது இரண்டு வழிகள் தான். ஒன்று போராடுவது. இன்னொன்று வாயை மூடிக்கிட்டு சாவது. இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் விவசாய நலன் கருதி, தற்கொலை செய்து கொள்ள மறுத்து வாழ்வதற்காக போராடும் விவசாயிகளை அரசே முன்வந்து கொன்று குவிக்கிற திட்டத்தை (வர்க்க போரை) மத்திய அரசு மீண்டும் துவங்கி வைக்கிறது.
விவசாயிகளின் போராட்டங்கள் ஏகாதிபத்திய அரசை வீழ்த்தும் வல்லமை கொண்டது. ஏகாதிபத்தியத்தை வீழ்த்தும் உழவர்களின் போராட்டத்திற்கு நாம் உடன் நின்று வலு சேர்ப்போம்.
தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் இயக்கம்
Comments
Post a Comment