நீர்வளம் மீட்பென்பது குளத்தில் குப்பை அகற்றும் பணியல்ல

நம் வீட்டுகளுக்கு யார் வந்தாலும் முதல் உபசரிப்பாக ஒரு குவளை நீரைக் கொடுப்போம். ஆனால் இன்று அந்த பண்பாடு தமிழக வீடுகளில் அற்றுப் போயிருக்கிறது. ஆதியில் வேட்டையாடி ஓடித் திரிந்த நம்மை பண்பட்ட உலகின் மூத்தகுடி சமூகமாக வளர்த்தது தமிழக ஆறுகள்தான். தாய்ப் போன்ற அந்த ஆறுகளுக்கு நாம் இன்று செய்து கொண்டிருக்கும் நன்றிக்கடன் என்னவென்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. உலகில் எல்லா ஆறுகளும் பண்பட்ட சமூதாயங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கிடவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உணவு உற்பத்தியில் மனிதன் ஈடுபடுவதற்குச் சில சாதகமான இயற்கைச் சூழல் தேவை. அதனால் தான் நீர்வளம் மிகுந்த அமேசான், மிசிசிபி, கங்கை போன்ற ஆற்றங்கரை பகுதியில் கி.மு. 1000 ஆண்டில்தான் வேளாண்மை தொடங்கியது. தமிழர்களின் வேளாண்மை பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே துவங்கிவிட்டது. ஆற்றில் குளித்து, குடித்து, ஆற்றில் தூண்டில் போட்டு மீன்பிடித்து, ஆற்றில் துணி துவைத்து, இக்கரையில் இருந்து அக்கரை செல்ல ஆற்றில் இறங்கி கடந்து சென்ற தலைமுறைகள் இப்போது ஓய்வு நாற்காலியில் சாய்ந்திருப்பார்கள் என்று நினைக்கிறன். அப்போது ஆறுகள் மக்களிடம் இருந்தது. இப்போது பன்னாட்டு நிறுவனங்களிடம் இருக்கிறது. ஆற்றோடு மிக நெருக்கமான உறவை கொண்டிருந்தவர்கள் தமிழர்கள். 'ஆற்றையும் மக்களையும் பிரிக்க வேண்டுமா? பாலம் கட்டுங்கள் போதும்' என்ற புதுமொழி நினைவுக்கு வருகிறது. பாரதியின் பாடல் வரிகள் இதோ
"காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு”
"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்ற தமிழ்த்திரைப்பட நகைசுவை காட்சியாக மாறிக்கியிருக்கிறது தமிழகத்தின் நிலை. இப்பேற்பட்ட நீர்வளத்தை இழந்த தமிழக இளைஞர்கள் பலரும் தங்கள் மண்ணின் நீர்வளத்தை மீட்கும் துடிப்போடு களமிருங்குவதை பார்க்கையில் மகிழ்வாக இருக்கிறது. நீர்வளத்தை பாதுகாக்கும், மீட்கும் நடவடிக்கை என்பது ஆற்றில் அல்லது குளத்தில் இறங்கி குப்பைகளை அள்ளுவதோ, சீமை கருவேல மரங்களை வெட்டுவதோ அல்ல. சற்று விரிவாக அதை உங்களோடு பேச வேண்டும்.
ஆறுகளை மீட்பதென்பது:
ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரை ஏறக்குறைய அனைத்து ஆறுகளும் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி, சமவெளிகளில் ஓடி கடலில், ஆற்றில் அல்லது ஏதேனும் ஏரியில் சென்று கலக்கிறது. மழையின் வழியாக மலையில் தோன்றி கடலில் சென்று கலந்து மீண்டும் மழையாகிற நீர் சுழற்சி பற்றி நாம் படித்திருப்போம். ஆக ஆறு உயிர்ப்போடு இருக்க வேண்டுமென்றால் மழைக்காடுகளும் கடலும் தன் வளத்தை இழக்காமல் இருத்தல் வேண்டும்.
வற்றாத ஆறு / பேராறு (Perennial Rivers), பருவ கால ஆறு (Non-Perennial Rivers) என்று ஆறுகளை இரண்டாக பிரித்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் நீரோட்டத்தை கொண்டிருக்கும் ஆறுகள் பருவகால ஆறுகள். அதனை காட்டாறு, சிற்றாறு என்று வகைப்படுத்தலாம். காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட பேராறுகள் மீதுதான் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் பருவ கால ஆறுகள் பல இன்று அழிக்கப்பட்டுவிட்டது. பல காட்டாறுகளும் சிற்றாறுகளும் சேர்ந்ந்துதான் ஒரு பேராற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

இன்று நிலவுகிற பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென்றால், நேற்று என்ன நடந்தது என்பதை ஆராய வேண்டும். வரலாறு பற்றிய தேடல் இல்லமால் நிகழ்கால சிக்கலை தீர்க்க முடியாது. எக்காலமும் கரைபுரண்டு வெள்ளம் ஓடிய பேராறுகள் ஏன் இன்று வற்றி, சாக்கடையாக ஓடுகின்றன? வெறும் 25 நாட்கள் பெய்யும் மழையை தன் மடிகளில் சேமித்து வைத்துக் கொண்டு, ஆண்டுமுழுவதும் ஆறுகளில் தண்ணீரை அனுப்புவது மேற்கு தொடர்ச்சி மழைக்காடுகள்தான். மேகங்களை ஈர்த்து மழையை பொழிய வைக்கும் தன்மை படைத்த மரங்கள் அழிக்கப்பட்டு, தேயிலை தோட்டங்களும், தைலம், தேக்கு மர காடுகளும், தாது சுரங்கங்களும், சுற்றுலா பங்களாக்களும் காட்டுக்குள் வந்தன. இவை எதுவும் திருட்டுத்தனமாக காட்டுக்குள் ஊடுருவி வரவில்லை. அரசு வனத்துறையின் அனுமதியோடு சட்டப்படிதான் நம் காடுகளை அழித்தன. நம் சட்டமே நம் இயற்கை வளங்களை அழிப்பதற்கும், தனியொரு முதலாளிக்கு தாரை வார்ப்பதற்கும் வளைந்ந்து கொடுக்கும் வண்ணம் இருக்கிறதென்றால், எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறோம் என்று யோசித்தி பாருங்கள். ஆறுகளை உற்பத்தி செய்யும் சுனைகள், ஊற்றுகள், மலையோடைகள், சிற்றருவிகள் அற்றுப் போயின. அதன் பின்னும், வறண்ட கிடக்கிற சமவெளியின் நாவினை நனைக்க, கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வந்து கொண்டிருந்த ஆற்று நீரையும் பேரணைகள் கட்டி தடுத்தனர். இது அத்தனையும் ஆறுகளின் மீது, அதன் உற்பத்தி பகுதியில் நிகழ்த்தப்பட்ட வன்முறையாகும். சமவெளிகளில் நகரமயமாதலும், தொழிற்சாலைமயமாதலுக்கும் வறண்டு போயிருந்த ஆறுகளை, கழிவநீரோடையாக்கி அழகு பார்த்தன.
ஆற்று நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி, நீரை சுற்றுவட்டார பகுதிகளுக்கு பரப்பி, நிலத்தை ஈர்ப்பதத்தோடும், நிலத்தடி நீரை மீளுற்பத்தி செய்கிற அமைப்பாகவும் விளங்கிய ஆற்றுமணல் பொதுப்பணித்துறையின் அனுமதியோடு முதலாளிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகளாக ஆறும், அதன் மணலும் சேமித்து வைத்திருந்த நிலத்தடி நீரை பன்னாட்டு நிறுவனங்கள் சூறையாடின. திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒரு லிட்டர் நீரை ஒண்ணே கால் பைசாவை அரசுக்கு கொடுத்துவிட்டு, நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் நீரை தாமிரபரணியில் இருந்து உறிஞ்சுகிறது. ஆனால் நமக்கு ஒருலிட்டர் நீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்கும் போது 7 லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் நீரும் மேலும் 8 லிட்டர் நீரை நஞ்சாக்குகிறது. ஆக ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க 56 லிட்டர் நல்ல நீர் அழிக்கப்படுகிறது. இப்படி தமிழ்நாட்டில் மட்டும் 17 இடங்களில் பெப்சி, கோலா நிறுவனங்கள் நமது தண்ணீரை உறிஞ்சி நாசப்படுத்துகின்றன. அது போக சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் என ஆற்று நீரை, நிலத்தடி நீரை நஞ்சாக்கும் பல வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் உள்ளது
ஆறு கடலில் கலப்பது அதனின் பிறப்புரிமை. ஆறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியில் வளரும் அலையாத்தி காடுகளை நம்பி பல்வேறு உயிரினங்களும், அதனை நம்பி வாழும் மீனவ கிராமங்களும் இருக்கின்றன. ஆறு கடலில் கலக்கும் போது கடலுக்கு தேவையான தனிமங்கள் கிடைகின்றன. இதனால் கடலின் சமநிலை பேணப்படுகிறது. அதனால் கடல்நீர் ஆவியாகி மழையாக நம் மேற்குதொடர்ச்சி மலைகளில் பொழியும் சுழற்சி நடைபெறுகிறது. கடல் வாழ் மக்களையும், உயிரினங்களையும் பற்றி துளியும் யோசிக்காமல், கடற்பகுதி மக்களின் குடிநீர், பாசன நீர், குறித்து எந்த கவலையுமில்லாமல் ஆறு கடலில் வீணாக கலக்கிறது என்று சமவெளி மக்களாகிய நாம் சொல்லுகிறோம். கடற்பகுதி மக்களுக்கும் உயிரினங்களுக்கும் வாழ்வதற்கு நீர் வேண்டாமா? தமிழக ஆறுகள் கடலில் கலக்காததால் கடலோர வாழ்வாதாரம் முற்றிலும் பறிக்கப்பட்டுவிட்டது. ஆற்றுநீர் கடலில் கலக்காவிட்டால் என்ன? அதற்கு பதிலாக கடலில் அணுக்கழிவு கலக்கிறதே என்று நினைத்து பெருமைப்படுங்கள் என்கிறீர்களா?
இறுதியாக ஆறுகளில் உள்ள குப்பைகள், சீமை கருவேலம்: நமக்கு மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் குப்பை பிரச்சனையாக இருக்கிறது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வரும் இச்சூழலில் அதற்க்கு மாற்றான மக்கும் தன்மை கொண்ட உபயோக பொருட்களை அரசு உற்பத்தி செய்து மக்களிடம் சேர்க்க வேண்டும். பிறகு பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய வேண்டும். ஆனால் நமது அரசோ பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை என்று அவ்வப்போது அறிவிப்புகளை செய்யும். பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்துவிட்டால், பிறகு பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காதே. அதை நமது அரசாங்கம் செய்யுமா என்றால் செய்யாது? காரணம் பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்தால் பெருமுதலாளிகள் நட்டமடைவார்கள். பெரும்முதலாளிகள் நட்டமடைவதை மக்கள் அரசாங்கம் எப்படி பொறுத்து கொள்ளும்? நமது அரசை, பிளாஸ்டிக் உற்பத்தியை தடை செய்ய கோரியும், அதற்கு மாற்றான உபயோக பொருளை உற்பத்தி செய்ய வலியுறுத்தியும் போராடாமல், நாம் குப்பைகளை அள்ளிக் கொன்டே இருந்தால், காலம் முழுக்க அள்ள வேண்டியதுதான். சரி தன்னார்வ பணியாக ஆற்றில் சிதறிக்கிடக்கிற குப்பைகளை அள்ளி அரசு வைத்துள்ள குப்பைத் தொட்டியில் போடுறோமே? அதனை எடுத்து செல்லும் மாநகராட்சி அல்லது ஊராட்சி வாகனம் அந்த குப்பைகளை எங்கே கொட்டும் என்று எப்போதாவாது பார்த்து இருக்கிறீர்களா?. பெரும்பாலும் அது ஆற்றின் இன்னொரு பகுதி அல்லது ஏதெனும் நீர்நிலையில்தான் கொட்டப்படுகிறது. இதற்காகவா நாம் இவ்வளவு மெனக்கெட்டு குப்பைகளை அகற்றினோம். அடுத்து சீமைக்கருவேல மரம் ஒழிப்பு. சீமை கருவேல மரம் அகற்றப்படட வேண்டும். ஆனால் சீமை கருவேல மரம் வெட்ட வெட்ட மீண்டும் முளைக்கும் தன்மை படைத்தது. மேலும் பறவைகள், ஊர்வன உள்ளிட்ட பல உயிரினங்களின் வாழ்விடமாக சீமை கருவேல மரபுதர்கள் இன்று விளங்குகின்றன. அதனை முற்றாக அழிப்பதில் பல்வேறு சிக்கல் உள்ளது. அது குறித்து இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டும்.
ஆறுகளின் அழிவுக்கு இப்படி பல்வேறு காரணங்கள் இருக்கும் போது ஆறுகளை மீட்போம் என்ற பெயரில் நாம் குப்பைகளையும், சீமை கருவேல மரத்தையும் அகற்றிக் கொண்டு இருக்கிறோமே, யாருக்காக? என்ன நடந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்? நம்மை இந்த பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு இதுதான் முதல் வேலையா? இல்லை இதற்கு முன் இப்படியான நீர்நிலை சீரமைக்கும் வேலைகளை அவர்கள் வேறு எந்த இடத்திலாவது செய்து இருக்கிறார்களா? அப்படினா அதன் இன்றைய நிலையென்ன? அங்கு மாற்றம் நடந்திருக்கிறதா? என்கிற கேள்விகளுக்கு விடையை தேடுங்கள். அதற்கான விடை ஏமாற்றமாகவே இருக்கும். குப்பைகளை அள்ளியதை போன்று படங்களும், மழை பெய்த பின் தண்ணீர் நிரம்பி இருக்கும் படங்களும் அவர்களிடம் இருக்கும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மீதான ஆக்கிரமிப்பு அகற்றுவதோ, கழிவுநீரை கலக்க செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க செய்வதோ அவர்களின் வேலைத்திட்டத்தில் இருக்காது. எந்திரங்களை கொண்டு நீர்நிலைகளை தூர்வாருவதன் வழியாக, நீர்நிலைகளை பராமரிக்கும் பொறுப்பில் இருந்து அரசை கழற்றிவிடும் வேலைகளை தொண்டு நிறுவனங்கள் செவ்வனே செய்து கொண்டு இருக்கின்றன. ஏரிகளை பராமரிப்பதும், பாதுகாப்பதும் தொண்டு நிறுவனங்களின் பொறுப்பு என்றாகிவிட்டால், அரசு எதற்கு? நாம் வரிப்பணம் கட்டுவது எதற்கு? இவ்வளவு பொறுப்பும், நல்ல உள்ளமும் கொண்ட தொண்டு நிறுவனங்கள் ஏன் தேர்தலில் நிற்க கூடாது? சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகி, பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு, நம்ம வரிப்பணத்தில் தொகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாறிவிட முடியுமே? ஏன் தொண்டு நிறுவனங்கள் அதை செய்வதில்லை? தேர்தல் அரசியலை விட தொண்டு நிறுவனங்களில் அதிக பணம் புரள்கிறது. எரிகுளங்களை ஆக்கிரமித்து, கழிவுகளை கொட்டி நாசப்படுத்தும் நிறுவனங்கள் தரும் நிதியில்தான் தொண்டு நிறுவனங்கள் இயங்குகின்றன. மக்களின் கோபம் அந்த நிறுவனங்கள் மீது திரும்பிவிடாமல் மடைமாற்றம் செய்கிற வேலையை தொண்டு நிறுவனங்கள் செய்து கொண்டு இருக்கின்றன. தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள ஒரு கண்மாயில் தனியார் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பு நடக்குதென்றால், நாம் யாரிடம் முறையிடுவது அரசிடமா? அறக்கட்டளைகளிடமா? அரசிடம்தானே! காவல்துறை, பொதுப்பணித்துறை, நீதிமன்றம் என அதிகாரம், சட்டம், வரிப்பணம் எல்லாம் அரசிடம்தானே இருக்கிறது. அரசை இயங்க வைப்பதுதானே நமது வேலையாக இருக்க வேண்டும். அப்படியிருந்தும் ஏன் தொண்டு நிறுவனங்களை நோக்கி, இளைஞர்கள், மக்கள் போகிறார்கள் என்றால், குப்பை அள்ளுவது போல, ஏரிகளில் நீர் நிரம்பி இருப்பது போல அழகழகான படங்கள், பிரபலங்களின் ஆதரவு, விருதுகள் எல்லாம் தொண்டு நிறுவனங்களிடம் இருக்கும். எந்த கேள்விகளுமின்றி அரசியல் புரிதலற்ற புதியவர்களை அது ஈர்க்கும். ஆனால் அரசியல் புரிதலோடு போராடுபவர்களிடம் அப்படி ஈர்க்கும் படியான படங்கள் இருக்காது. தெருக்களில் நின்று போராடுவது, காவல்துறையிடம் அடிவாங்குவது, சிறை செல்வது போன்ற அரசின் நெருக்கடிகளுக்கு ஆளாகுகிற நடவடிக்கைகளே இருக்கும். தொண்டு நிறுவனங்கள் வைத்திருக்கிற ஏரியில் தண்ணீர் நிரம்பியிருக்கும் காட்சியோடு ஒப்பிட்டு பார்க்கிற போது, போராட்டக்காரர்கள் ஒன்றும் செய்யாதவர்களாகிவிடுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று அறவழியில் போராடுபவர்கள் மீது தேசதுரோகிகள், சமூக விரோதிகள், நக்சலைட்டுகள் என்று மக்கள் நெருங்க இயலாத வண்ணம் அரசால் முத்திரை குத்தப்பட்டிருக்கும். நீர்வள அழிப்பிற்கும் மீட்பிற்கும் தொண்டு நிறுவனங்கள் வளர்த்தெடுக்கும் கருத்துகள் விரிவாக எதிர் கொள்ளப்பட வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் இன்றைய நீர்வள பிரச்சனைக்கு வேறு புதிய காரணங்களை சொல்லி உங்களுக்கு வகுப்பெடுத்திருக்கும். தனிபர் ஒழுக்கமின்மை, நீர் வீணடித்தல், நீர் அசுத்தமாக்குதல், நாம் பயன்படுத்துகிற பிளாஸ்டி பொருட்கள், சோப்பு, சாம்பு, ஆற்று நீரை நாசமாக்கிவிட்டன என்று மக்கள் மீதே பழியை போடும். மக்கள் திருந்தினால் நாடு திருந்திவிடும் என்று சொல்வார்கள். இன்று நிலவுகிற பிரச்சனைகளுக்கு தீர்வாக மழைநீர் சேகரிப்பு, நதிநீர் இணைப்பு, நீர்வழிச்சாலை, நீர் சிக்கனம் என்றெல்லாம் கதையளப்பார்கள்.
முதலில் தொண்டு நிறுவனங்கள் சொல்லும் தண்ணீர் குறித்தான தமிழர்களின் தனிநபர் ஒழுக்கமின்மை பற்றி பார்ப்போம். நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகிறது. தெய்வ வழிபாட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ, பூவிதழ்களையோ இட்டு வழிபடுவது எல்லாச் சாதியரிடமும் காணப்படும் வழக்கம். நாட்டார் தெய்வங்களின் வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்த காரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடையே ஆன்மா (Spiritual Essence) அடங்கி இருப்பதாக நம்பிக்கை. தண்ணீரெல்லாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிற ஆறுகளின் வழியாக நமக்கு கிடைக்கின்றன. எனவே, தெய்வங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தன என்ற நம்பிக்கையும் தமிழக மக்களிடம் உருவானது. கோடைக் காலத்தில் நீர் பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாக கருதப்பட்டது. இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே, அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பது தமிழர்களின் வழக்கம். ஆறாட்டு (தீர்த்தவாரி) பெரும்பாலும் தைப்பூச நாளிலும் மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன. இறந்தவர்களுக்கு நீர்மாலை எடுத்தல், நீரில் முளைப்பாரி கரைத்தல், நீர்நிலைகள் கரைகளில் கருப்பு, அய்யனார், பாண்டி உள்ளிட்ட தெய்வங்களை ஏற்றி வழிபடுதல், அதனால் நீர்நிலைகள் மீது செருப்பணிந்து செல்லமால் இருத்தல் என தண்ணீரை தெய்வமாக வழிபடும் பண்பாட்டு மரபை கொண்ட தமிழக மக்களிடம் தண்ணீர் குறித்தான ஒழுக்கங்களை பாடமெடுப்பது அவர்களை அவமானப்படுத்துகிற செயலில்லையா? தமிழர்களின் பண்பாட்டை அழித்து அவர்களை ஐரோப்பிய பண்பாட்டுக்கு நகர்த்தியிருக்கும் உலகமயத்தையும் அரசையும் கேள்வி கேட்டு உலுக்கி இருக்கிறோமா? இப்போது சொல்லுங்கள் யாரிடமில்லை சுய ஒழுக்கம்?
அடுத்தது நீர்சிக்கணம் குறித்து பார்ப்போம். உலக சுகாதார நிறுவனம் ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் நீர் வழங்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு 70 லிட்டர் நீரும், அமெரிக்காவில் ஓருவருக்கு 700 லிட்டர் நீரும் வழங்கப்படுகிறது. ஊர் ஊரக நடந்து, எங்கோ இருக்கிற கசிவுநீர் குட்டையில், கிணற்றில் காத்திருந்து வேகாத வெயிலில் தண்ணீர் எடுத்து திரும்புகிறார்கள் பெண்கள். நிலைமை இப்படி இருக்க, தமிழக மக்கள் தண்ணீரை வீணடிக்கிறார்கள் என சொல்வது எவ்வகையில் நியாயம்? அரசின் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள், மாநகராட்சி லாரிகள் சிந்தும் தண்ணீர் குறித்து கேள்வி எழுப்பிதுண்டா? கிரிக்கெட், கோல்ப் உள்ளிட்ட மைதான புற்களை பராமரிக்க தினசரி பல்லாயிரம் லிட்டர் நீர் செலவிடப்படுகிறது. தண்ணீரை வீணடித்து கழிவு நீராக மாற்றும் பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும், நிறுவனங்களுக்கும்தான் தேவை உங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் எங்கள் மக்களுக்கல்ல. தொண்டுநிறுவனங்கள் பெரிய பெரிய நிறுவனங்களிடம் போய் விழிப்புணர்வு செய்யுமா என்றால் செய்யாது? ஏனென்றால் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதே இந்த பெரிய பெரிய நிறுவனங்கள்தான். இதையெல்லாம் கேள்வி கேட்டால், அவர்களின் நன்கொடை வசூலுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அரசு வேலைகளை செய்யத் துவங்கிவிடும்.
அடுத்தது அசுத்தமாக்குதல் குறித்து பார்ப்போம். குளிப்பதற்கு குளம், குடிப்பதற்கு ஊருணி, கால்நடை குளிப்பாட்ட குட்டை, பாத்திரம் கழுவும் நீர் தோட்டத்திற்கு என்று முறையாக நீரை பயன்படுத்தி கொண்டிருந்த மக்களை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைத்தது யார்? ஆற்றங்கரையிலும், கண்மாய்கரையிலும், புதர்களிலும் காலைக்கடன் கழித்த மக்களை, தூய்மை இந்தியா என்ற பெயரில் கழிப்பறை கட்டி பயன்படுத்த சொன்னது அரசாங்கம். நகரங்களும், கழிப்பறைகளும், தூய்மை இந்தியா திட்டமும் வருவதற்கு முன்பு ஆறுகள், நீர்நிலைகள் ஆரோக்கியமாக இருந்தன, கழிப்பறைகள் அசுத்தமாக இருந்தன. இப்போது கழிப்பறைகள் சுத்தமாக இருக்கிறது, ஆறுகள், நீர்நிலைகள் சாக்கடையாகிவிட்டன. இதுதான் வளர்ச்சி, தூய்மை இந்தியா லட்சணம். குறைந்தபட்சம் கழிப்பறையை சுத்தமாக வைத்திருப்பதற்காவது தூய்மை இந்தியா திட்டம் பயன்பட்டதே என்று பெருமைபட்டுக் கொள்ள வேண்டியதுதான். வைகை ஆற்றில் மட்டும் மாநகராட்சியின் பாதாள சாக்கடை குழாய்கள் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கலக்கிறது. இப்போது சொல்லுங்கள் யார் நீரை அசுத்தமாக்குவது?
கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களை போட்டு வைப்பதும், கலங்கிய நீரினுள் தேற்றா மர காய்களை போட்டு தெளிய வைத்து குடிப்பதும், ஊரணி கரைகளிலே நெல்லி மரங்களை நட்டு வைத்து அதற்கு நெல்லிக்காய் ஊருணி என்று பெயரிடத்துவதும் தமிழ் மக்களின் வழக்கம். இவ்வாறான வாழ்வியலை கொண்டவர்களா நீரினை அசுத்தப்படுத்த்துகிறார்கள்? அவர்களின் நீர்வளத்தை தொழிற்சாலை கழிவுகள் மூலம் ரசாயன கழிவாக்கி, அதனை சுத்தப்படுத்த எந்திர சவ்வூடு பரவல் (RO) தொழிநுட்பத்தை கொடுத்தது யார்? முதலாளிகளின் அறிவியல் எதை தொழில்நுட்பம் என்று ஏற்று கொள்ளும் நெல்லிமரத்தையா? RO எந்திரத்தையா? சுத்திகரிப்பே செய்ய முடியாத அளவுக்கு ரசாயன கழிவுகளை நமது ஆற்றில் கொட்டும் தொழிற்சாலைகளை என்ன செய்திருக்கிறோம்?

அடுத்து மழைநீர் சேகரிப்பு: வேளாண்மை, குடிநீர், பயன்பாட்டு நீர் என அனைத்திற்கும் ஏரி, குளம், குட்டை, கண்மாய், ஊருணி, ஏந்தல், தாங்கள் என தமிழகத்தில் வருடத்தில் வெறும் 25 நாட்கள் பெய்யும் மழைநீரை சேமிக்க பல்வேறு நீர்நிலைகளை கூட்டாக வெட்டி, சிறப்பாக வாழ்ந்தவர்களின் நீர்நிலைகளின் மீது அரசு அலுவலகங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டிடங்களை கட்டி, நீர்நிலைகளை அழித்துவிட்டு, இப்போது நீர்நிலைகளை பறிகொடுத்து நிற்கும் மக்களிடம் வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு தொட்டி வைக்க சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வது எவ்வளவு யோக்கியமானது என்று யோசித்து பாருங்கள். நிலத்தடி நீர் குறைந்ததற்கு காரணம் மக்கள் வீட்டில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்காததுதான் காரணம் என மக்களை குற்றவாளிகளாக்கும் வேலைதான் மழைநீர் சேகரிப்பு திட்டம். இத்தனை வறட்சியான சூழலுக்கு பிறகும், பல நீர்நிலைகளை அரசு ஆக்கிரமித்ததற்கு ஈடாக, மழைநீரை சேமிக்கும் வண்ணம் , நமது அரசு ஒரு நீர்நிலையை புதிதாக எங்கேயாவது அமைத்து கொடுத்திருக்கிறதா? மழைநீரை சேமிக்கும் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட நீர்நிலைகள் எங்கே? வீட்டில் அமைக்கப்படும் மூனுக்கு மூணு மழைநீர் சேகரிப்பு தொட்டி எங்கே? இப்போது சொல்லுங்கள் யார் மழைநீரை சேமிக்க வேண்டும்? தமிழக மக்களுக்கு தேவை விழிப்புணர்வு அல்ல இழக்க செய்த வாழ்வியலுக்கான நினைவூட்டலும், அரசியல் புரிதலும்தான்.
அடுத்து நதிநீர் இணைப்பு மற்றும் நீர்வழிச்சாலை பற்றி பாப்போம். தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக 33 ஆற்றுப்படுகைகள் உள்ளது என்று அரசு பொதுப்பணித்துறையின் புள்ளிவிபரம் கூறுகிறது. இது முழுமையான விபரம் அல்ல. மதுரை மாவட்ட எல்லைக்குள் வைகை, கிருதுமால், சாத்தையாறு, மஞ்சமலையாறு, குண்டாறு, வரட்டாறு, கௌண்டா ஆறு, பாலாறு, திருமணிமுத்தாறு, உப்பாறு, சிலம்பாறு என 11 ஆறுகளை கண்டறிந்திருக்கிறோம். இது போக கொண்டைமாரி ஓடை, தாடகைநாச்சியம்மன் ஓடை, செட்டியாபட்டி ஓடை, தொட்டப்பநாயக்கனூர் ஓடை, ஏழு கண் ஓடை ஆகிய மலையோடகளும் மதுரைக்குள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இயற்கை நீராதாரங்களை நம்பி வேளாண்மை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தின் நிலையே இவ்வாறு இருக்கையில், தமிழகத்தில் வெறும் 33 ஆற்றுப்படுகைகள் மட்டுமே இருக்கிறது என்கின்ற அரசின் அரைகுறை தரவுகளை கொண்டு எவ்வாறு தமிழக ஆறுகளை பாதுகாக்க முடியும் என்று கேள்வியோடு நதிநீர் இணைப்பு மற்றும் நீர்வழிச்சலை திட்டம் பற்றி பகுத்து பாப்போம். சுருளியாறு, தேனியாறு, வரட்டாறு, பழனியாறு, மஞ்சளாறு, நாகலாறு, மருதநதி, சிறுமலையாறு, சாத்தையாறு, உப்பாறு முதலிய ஆறுகள் அனைத்தும் வைகையில் சென்று கலக்கிறது. மேற்சொன்ன ஆறுகள் அனைத்தும் வைகையோடு இணைகின்றன. இதுதானே இயற்கையான நதிநீர் இணைப்பு திட்டம். இந்த இயற்கை நதிநீர் இணைப்புகளின் இன்றைய நிலையென்ன? இந்த ஆறுகளெல்லாம் என்னாயிற்று? ஆறுகள் மட்டுமல்ல நீர்நிலைகளும் இணைக்கப்பட்டுத்தான் உள்ளது. வரத்து மற்றும் வெளிப்போக்கு கால்வாய்களின் வழியாக தமிழக நீர்நிலைகளும் சங்கிலி தொடராக ஆறுகளோடு இணைக்கப்பட்டுள்ளது. மதுரை சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் இருந்து வைகையின் தென்கரையில் கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் அரிகேசரியால் வெட்டப்பட்ட வாய்க்கால் நாகதீரத்தம் வழியாக் சென்று கிருதுமால் நதியுடன் இணைகிறது. அரிகேசரி ஆறு என்று அழைக்கப்பட்ட அந்த கால்வாய் வைகை - கிருதுமால் நதிநீர் இணைப்பு திட்டமாக விளங்கியது. இதுதான் உலகின் முதல் நதிநீர் இணைப்பு. ஆனால் இன்று கிருத்துமால் என்ற ஆறே காணாமல் போய்விட்டது. பல்லாயிரமாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த தமிழக ஆறுகள் ஏன், எப்படி வற்றிப் போனது என்பது பற்றிய வரலாற்று, அறிவியல், அரசியல் சமூக காரணிகளை ஆராயாமல், இழந்த ஆறுகளை மீட்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசாமல், வடநாட்டு ஆறுகளை இணைப்போம், நீர்வழிச்சாலை அமைப்போம் என்று பேசுவது எவ்வகையில் தீர்வாக இருக்கும்? இமய மலை இருப்பதால்தான் வடமாநிலங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதிகரிக்கும் வெப்பமயமாதலால் இமய மலை முழுதும் உருகி முடிந்துவிட்டால், வடமாநில ஆறுகள் வற்றி போகும், பிறகென்ன அமேசான் நதியை இந்திய நதிகளோடு இணைக்கும் திட்டம்தான்? போக்குவரத்து சாலைகளை சீர் செய்யவே வக்கில்லாத அரசு நீர்வழிச்சாலை பற்றி பேசுவது எவ்வளவு முரண். பெரிய பெரிய திட்டங்களை போட்டால்தான் பல கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்க முடியும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு கான்டராக்ட்காரர்களிடம் இருந்து பெரிய தொகையை கமிஷனாக பெற முடியும். அரசியல்வாதிகளே தங்கள் பினாமிகளின் பெயர்களில் மொத்த குத்தகையையும் எடுத்துக் கொள்கிறார்கள். முதலாளிகளும், அரசியல்வாதிகளும் லாபமடையத்தான் திட்டங்கள் போடப்படுகிறதேயொழிய, மக்களுக்காக இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் பக்கத்துக்கு மாநிலமான கேரளாவும், கர்நாடகாவும், தமிழக ஆற்றுநீர் உரிமையை மறுக்கும் வேளையில், வடமாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீரை தரும் அல்லது மத்திய அரசு பெற்றுத்தரும் என்று நம்புவது முட்டாள்தனமில்லையா?
நீர்நிலை மீட்பு என்பது:
நீரை நிலைக் கொள்ள செய்யும் அல்லது தேக்கி வைக்கும் மனிதனின் கட்டுமானங்கள் நீர்நிலை என்போம். குடிநீர், பயன்பாட்டு நீர், பாசனம், மீன்பிடி, கால்நடை குளிர்பாட்டுதல், நீச்சலடித்தல், துணி துவைத்தல், புரவி எடுத்தல், நீர்மாலை எடுத்தல் என நீர் நிறைந்திருக்கும் ஒரு நீர்நிலையோடு மக்கள் ஏதோ ஒரு வகையில் உறவு கொண்டிருப்பார்கள். வெள்ளரி தோட்டம் போடுதல், கால்நடை மேய்த்தல், வண்டல் மணல் எடுத்தல், களிமண் எடுத்தல், மீன்பிடித்திருவிழா நடத்துதல், விளையாட்டு திடலாக இருத்தல் என நீரற்ற நீர்நிலையோடும் மக்கள் உறவுக் கொண்டிருப்பார்கள். நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நீர்நிலை என்பது பயன்தரக்கூடிய ஒரு ஏற்படாகத்தான் விளங்கி வருகிறது. நீர்நிலை மக்களின் பண்பாட்டோடு கலந்திருக்கிறது. பண்பாடு என்பது நிலம் சார்ந்தது, உற்பத்தி சார்ந்தது. எடுத்துக்காட்டாக சல்லிக்கட்டு நமது பண்பாடு என்கிறோம். காளை மாடுகள் விவசாயத்தில் ஏர்கட்டி உழவு செய்ய தேவைப்படுகிறது. அவ்வாறு உணவு உற்பத்தியில் உதவுகிற காளை மாடுகளை நன்றி சொல்லி கொண்டாடும் விழாதான் பொங்கலும், சல்லிக்கட்டும். தொடர்ச்சியாக நிகழுகிற போது அது பண்பாடாக மாறுகிறது. அவ்வகையில் நோக்கும் போது வேளாண்மை, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, நீச்சல் என எல்லாம் நீர்நிலைகளோடு மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு தொடர்புதான். இந்த பண்பாட்டு தொடர்பை அறுத்தெறிவதன் வழியாகத்தான், ஒரு நீர்நிலையை மக்களிடமிருந்து பிரிக்க முடியும், அழிக்க முடியும். உதாரணமாக ஒரு கண்மாயில் கோலா நிறுவனத்தின் கட்டிடம் வர போகிறது என்று தெரிந்தவுடனே, அந்த கண்மாயை சார்ந்திருக்கும் விவசாயி, மீனவர், குயவன், மேய்ப்பன், பெண்கள் என அனைவரும் அரசுக்கு மனு போடுவார்கள், ஏதும் நடக்கலைன்னா நீர்நிலையை பாதுகாக்க போராடுவார்கள். கண்மாய்யோடு பண்பாட்டு தொடர்பு கொண்டிருக்கும் இந்த பூர்வகுடி மக்களை அகற்றுவதன் மூலமாக அந்த கண்மாயை ஆக்கிரமிக்க முடியும் என்று அரசுக்கு தெரிய வருகிறது. இதுவே நகரமென்றால் ஒரு நீர்நிலையை ஆக்கிரமிக்கும் போது யாரும் போராட மாட்டார்கள். காரணம் நகரத்து மக்களுக்கு நீர்நிலையோடு எந்த தொடர்புமில்லை. நகரத்து மக்களுக்கும் தண்ணீர் தருவது லாரியாக இருக்கிறது, கிராமத்திற்கு ஆறு அல்லது ஏரியாக இருக்கிறது. நகரத்துக்கு மக்களுக்கும் லாரிக்கும்தான் தொடர்பு. அதனால்தான் நகரத்தில் தண்ணீர் லாரியை கொடு ன்னு போராடுகிறார்கள். கிராமத்தில் கண்மாயை தூர்வாறு, வரத்து கால்வாயை சீரமை ன்னு போராடுறாங்க. இதன் வழியாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒரு நீர்நிலை உயிர்ப்போடு இருப்பதற்கு பண்பாட்டு தொடர்பு முக்கிய காரணியாக இருக்கிறது. ஒரு நீர்நிலையின் பாசனத்தை நம்பி ஒரு உழவன் விவசாயம் செய்கிறார் என்றால் அவரை ஊக்கப்படுத்தி, உதவி செய்து அவரை தொடர்ச்சியாக வேளாண்மையில் ஈடுபட வைக்க வேண்டும். கடைசி உழவன் ஒருவன் கண்மாயை நம்பி வேளாண்மை செய்யும் வரை அந்த கண்மாயை சீரமைப்பதும், நீர் நிறைப்பதும், பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதும் அரசு பொதுப்பணித்துறையின் கடமை. அந்த உழவனை கண்டறிந்து, அவரை இணைத்துக் கொள்வதுதான் நீர்நிலை மீட்பு பணியின் முதல் நகர்வு. பூர்வக்குடி மக்களை கொண்டுதான் நீர்நிலை மீட்பு போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். குறிப்பாக நீர்நிலை உரிமை அல்லது சமுகநீதி மறுக்கப்படும் சமூக மக்கள் அவ்வூரில் இருப்பார்களெனில், அவர்களுக்கான சமவாய்ப்பையும், சம உரிமையும் முன்நிபந்தனையாக கொண்டே போராட்டம் அமைய வேண்டும். நீர்நிலையை மீட்க விரும்பும் தோழர்கள் மேல் சொன்னவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பண்பாட்டு தொடர்பு ஆண்டாண்டு காலம் நிலைத்திருக்கும் வகையில் திட்டம் அமைக்க வேண்டும். நீர்நிலைகளை சீரமைப்பதும், பராமரிப்பதும் அரசின் வேலை.
நீர்நிலைகளின் பல்லுயிர் சூழலுக்கு அச்சுறுத்தலாக இருப்பது நீர்நிலைகளை குத்தகைக்கு விடும் அரசின் திட்டமாகும். மீன்பிடி குத்தகை முறையால் பாரம்பரிய மீனவர்கள் நசுக்கபப்டுகிறார்கள். அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபப்டுகிறது. நீர்நிலைகள் மீது மக்கள் கொண்டிருந்த பாரம்பரிய உரிமை பறிக்கப்படுகிறது. காசுள்ள முதலாளிகள் மட்டுமே மீன்பிடிக்க முடியும் என்கிற நிலை உருவாக்கப்படுகிறது. உணவாக, உயிராக அல்லாமல் மீன்களை பணமாக மட்டும் பார்க்கவும், மீன்பிடித் தொழிலில் உள்ள பாரம்பரிய பண்பாட்டு தொடர்பையும் மீன்பிடி கலை நுட்பத்தையும் அழிக்கவும் வழிவகுக்கிறது. பாசன மற்றும் நிலத்தடி நீர் தேவை கருதி சேர்த்து வைத்திருக்கும் ஏரி தண்ணீரை மீன் பிடிக்கும் தங்கள் லாபவெறிக்காக வீணாக திறந்துவிடுகிறார்கள். இப்படி பல்வேறு வழிகளில் நாட்டு மீன்களும் உள்ட்நாட்டு மீனவர்களின் வாழ்வியலும், பல்லுயிரிய வளமும் அழிக்கப்படுகிறது. ஜிலேபி கெண்டை, தேளிகேளுத்தி உள்ளிட்ட கலப்பின மீன்கள் நமது நாட்டு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்ளுவதால் நமது நாட்டு மீன்களின் பெருக்கம் குறைந்து, அழியும் நிலைக்கு வந்துவிட்டது. பசுமை புரட்சிக்கு பின் வேதியல் உர பயன்படும், நகரமயமாதலும், மீன் குத்தகை முறையும் கெண்டை, கெளுத்தி, குரவை, அயிரை, விலாங்கு, விரால், உழுவை, ஆரா, வெளிச்சி உள்ளிட்ட நாட்டு மீன் வகைகளையும், தவளை, நண்டு, நத்தை, பாம்பு, நீர்வாழ் சிற்றுயிர், நுண்ணுயிர் பாசி உள்ளிட்ட நீர்நிலையில் பல்லுயிரிய இயல்பு சூழல் முற்றிலும் அழித்துவிட்டது. குட்டைகளில் வளர்க்கப்படும் அத்தகைய செயற்கை உருவாக்க மீன்கள் சீக்கிரம் அறுவடைக்கு வர வேண்டும் என்பதற்காக அம்மீன்கள் மீது ஊசிகள் மூலம் வேதியல் நச்சு ஏற்றுகிறார்கள் குத்தகைக்காரகள். வேதியல் நஞ்சு ஏற்றப்பட்ட மீன்களை சாப்பிடும் மக்களின் நலன் பற்றி குத்தகைகார்களுக்கு எந்த கவலையும் இல்லை. குத்தகை முறையை ஒழித்து, நீர்நிலையை பொதுவாக்க வேண்டும்.
நீர்நிலைகளில் உள்ள சிக்கலில் ஒன்று நீர்நிலைகளின் கரைகளிலோ அல்லது நீர்ப்பிடிப்பு பகுதியிலோ ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகள் அமைந்திருக்கும். அவர்கள் அனைவரும் வளர்ச்சி என்ற பெயர்களில் சொந்த மண்ணை விட்டு அரசால் விரட்டியடிக்கப்பட்ட அகதிகளாக நீர்நிலைகளில், சாக்கடை ஓரங்களில் தஞ்சம் புகுந்திருப்பார்கள். நீர்நிலை மீட்பு பணியென்பது அவர்களை விரட்டியடிப்பது அல்ல. அவர்களின் வாழ்வாதார கோரிக்கையை முன் வைத்து போராடுவது. ஒடுக்கப்பட்ட அந்த மக்களுக்கான பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தாமல், (உறுதி என்பது அரசின் வாக்குறுதி அல்ல), நீர்நிலைகள் மீட்பு பணியை மேற்கொள்வது, அவர்களிடம் சமரசம் பேசுவது அடாவடித்தனமே ஒழிய வேறில்லை. ஒன்று அவர்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்திற்க்காக போராட வேண்டும் இல்லையேல் நீர்நிலை மீட்பு பணியை அதுவரை கிடப்பில் போட வேண்டும். இதுதான் சூழலியல் சமூக நீதி அல்லது பெரியாரிய அம்பேத்காரிய சூழலியல். நீர்நிலை அழிப்பிற்கு காரணமான முதலாளிய உற்பத்தி முறைக்கு எதிராக சாதிகள் கடந்து உழைக்கும் மக்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டுவது மாக்சிய சூழலியல். குமரப்பாவின் தற்சார்பு பொருளாதாரம் கொண்ட கிராமங்களும், மார்க்சின் பொதுவுடைமை அரசமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
அரசை வலியுறுத்தி போராடாமல் ஒரு நீர்நிலையை சீரமைக்க வேண்டுமென விரும்பும் தோழர்கள் அதனை நீர்நிலையால் பயனடையும் மக்களை கொண்டு செய்ய வேண்டும். அரசியலற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களை களமிறக்குவது எந்த விதத்திலும் நீர்நிலை மீட்பிற்கு உதவாது, பத்திரிக்கை செய்தியாவதை தவிர. மக்களின் உரிமை பொருளாக நீர்நிலையை மாற்ற வேலை செய்ய வேண்டும். முதலில் அந்த நீர்நிலையின் வரத்து கால்வாயின் நிலை குறித்து அறிய வேண்டும். வரத்து கால்வாய் அடைபட்டு இருந்தால் நீர்நிலைக்கு தண்ணீர் வருவதும் தடைபட்டுவிடும். மண்ணோடு சேர்ந்த வரும் நீரின் வரத்தால் மேடாகி போயிருக்கும் நீர்நிலையை அதன் இயல்பான ஆழத்திற்கு மீண்டும் கொண்டு வருதற்கு பெயர் தூர்வாருதல். நீர்நிலையின் இயல்பு ஆழத்திற்கு அதிகமாக மண்ணை தோண்டி ஆழப்படுத்தும் பணிக்கு பெயர் ஆழப்படுத்துதல். வேளாண்மை பயன்பாடுள்ள நீர்நிலையை தூர்வார வேண்டும். குடிநீர் மற்றும் இதர பயன்பாடுள்ள நீர்நிலையை ஆழப்பப்படுத்த வேண்டும். பாசன நீர்நிலையின் தளமும், பாசன பரப்பும் சமமாக இருந்தால்தான், முழுநீரையும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியும். பள்ளத்தில் கிடக்கும் நீர் மேடு நோக்கி பாயாது என்ற எளிய அறிவியலை புரிந்து கொண்டுதான் பாசன நீர்நிலைகளை தமிழர்கள் கட்டியிருக்கிறார்கள். தூர்வாரும் போதோ, ஆழப்படுத்தும் போதோ பெறப்படும் மணல் நீர்நிலையின் கரைக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டால்தான் கூடுதல் நீரை தேக்க முடியும். வாரும் மணலை நீர்நிலைகளுக்குள்ளாகவே கொட்டிக் கொண்டால், நீர் தேக்கும் அளவில் பெரிய மாற்றம் நிகழாது. நீர்நிலையின் மேல் மணலான வண்டல் மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நீர்நிலையை பாதுகாப்பதும், பராமரிப்பதும் உற்பத்தியில் ஈடுபடும் பூர்வகுடி மக்களின் பண்பாட்டு உறவுதான். இந்த பண்பாட்டு உறவை முற்போக்கு அணுகுமுறையோடு மீட்பதும், வளர்ப்பதும் நீர்நிலை மீட்பு பணியின் தொலைநோக்கு திட்டமாக இருக்க முடியும். வேளாண்மை, மீன்பிடி, முளைப்பாரி கரைத்தல் என அந்த உறவை நீடிக்க செய்ய வேண்டும். நகரத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு இந்த அணுகுமுறை பொருந்தாது. நகரத்தில் உள்ள நீர்நிலையை சுற்றியிருக்கும் குடியிருப்பு சங்கங்களை, சேரிப்பகுதி உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களை கொண்டு நீர்நிலை பாதுகாப்பிற்கென மக்கள் இயக்கம் ஒன்றை கட்டி, நீர்நிலை மீட்பு பணியை மேற்கொள்ளல் வேண்டும். நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலத்தல், மழைநீர் வடிகால் அடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால், அதனை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி தீர்வு காண வேண்டும். மழைநீர் வடிகால் அமைப்பு சரியாக உள்ளதா என்பதை கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். நகரத்தில் உள்ள நீர்நிலைகளுக்கான ஆதாரம் மழைநீர் வடிகால்தான். இதனை சரி செய்யும் முயற்சியில் சட்ட நடவடிக்கை சாத்தியப்படாத போது, போராட்டமே அடுத்த நகர்வு. நீர்நிலையை சீரமைத்த பின்பு, நகர மக்களுக்கும் நீர்நிலைக்குமான புதிய பண்பாட்டு உறவை உருவாக்கி, என்றும் அது நீடிக்கும் வகையில் அதனை கட்டமைக்க வேண்டும். கரைகளில் நடையாளர் பாதை அமைத்தல், கரைகளில் பறவை, பூச்சிகளை ஈர்க்கும் மண்ணின் மரக்கன்று வைத்து பராமரித்தல், ஏரி வறண்டு கிடக்கும் காலங்களில் விளையாட்டு போட்டி நடத்துதல், பறவைகளின் வரவை கணக்கெடுத்தல், மீன்பிடி திருவிழா நடுத்துதல், கரையில் உள்ள நாட்டார் தெய்வத்திற்கு விழா எடுத்தல் போன்ற நடவடிக்கைகளை நகரத்து மக்களை கொண்டு செய்விப்பதன் வழியாக புதிய பண்பாட்டு தொடர்புகளை உருவாக்க முடியும். அடிப்படையில் நகரங்களை உடைத்தெறிந்து மீண்டும் பாலின பாகுபாடற்ற, சாதியற்ற, பொருளாதார சமத்துவமுள்ள கூட்டு உற்பத்தி கொண்ட நவீன கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதுதான் நாம் நலத்துடன் வாழ்வதற்கான வழி.

குடிநீர் மீட்பென்பது:
தண்ணீர் என்பது விற்பனை பண்டமல்ல. அதை தொழிற்சாலையில் உற்பத்தி செய்ய முடியாது. தான் உற்பத்தி செய்ய முடியாத ஒன்றை எப்படி விற்க முடியும்? நீர் என்பது மனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பல்லுயிரியத்தின் வாழ்வாதார உரிமையாகவும். உண்மையில் புட்டியில் அடைத்து விற்கப்படும் நீர் நம் வீட்டுக் குழாய்களில் வரும் நிலத்தடி நீரை விட கொடியது. தாதுநீக்கம் செய்யப்பட்ட (வீட்டில் R.O செய்யப்பட்ட நீர் உட்பட) நீரை அருந்துவதால் உடலில் எலக்ரோலைட் செறிவு குறைக்கப்பட்டு உடலின் நீர் சமநிலை பாதுகாக்கப்படுகிறது. இந்நீரை தொடர்ந்து அருந்துவபவர்களுக்கு கால்சியம், மக்னீசியம் பற்றாக்குறை ஏற்பட்ட இதயநோயினால் ஏற்படும் மரணத்துக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு அதிகமிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அமெரிக்காவின் NRDC அமைப்பு 103 வணிக முத்திரைக்கு கொண்ட 1000 புட்டிநீர் மாதிரிகளை எடுத்துக் கொண்ட நான்காண்டு காலம் அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, குழாய் நீரை விட புட்டிநீர் சிறந்ததல்ல என்ற அறிக்கை வெளியிட்டுள்ளது. மூடி உறையிடப்பட்டிருக்கும் நீரைவிட திறந்த நிலையில் இருக்கும் நீரில் ஆக்சிஜனேற்றம் நடைபெற்று நீரிலுள்ள நச்சுப் பொருள்களின் வீரியம் குறையும் என்பது அடிப்படை அறிவியல். புட்டி நீரை விட வீட்டில் கிடைக்கும் நிலத்தடி நீரே பாதுகாப்பானது. சுத்தமான நீர் என்பது பளபளவென மின்னும் நீர். ஆரோக்கியமான நீர் என்பது தேவையான தாதுக்கள் தேவையான அளவு நிறைந்திருக்கும் சாதாரண நீர். நமது தேவை ஆரோக்கியமான நீர்தான். சுத்தமான அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரல்ல. ஆரோக்கியமான நீரை நிறுவனங்களால் தர முடியாது. அது இயற்கையின் கொடை. காசு உள்ளவர்களுக்கே நீர் என்றால் ஏழை எளிய மக்கள், காக்கை குருவிகள் நிலை என்னவாகும்? நீரை வழங்குவது அரசின் தலையாய கடமை. அதற்க்கு நாம் தண்ணீர் வரி கட்டுகிறோம். சுத்தமான நீர் பற்றிய நமது பரப்புரை நீரை விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு சாதகமாக அமையும். அனைவருக்கும் ஆரோக்கியமான நீர் அரசே வழங்கு என்ற பரப்புரைதான் மக்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் எதை செய்ய போகிறீர்கள்?
1991 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கைகளே இன்று நிகழ்கிற இயற்கை வள சுரண்டலுக்கு மூலகாரணமாக இருக்கிறது. இதன்படி அரசு தனியார் கூட்டுநடவடிக்கை (PPP- Public Private Partnership) என்ற திட்டத்தின் பெயரால் தண்ணீரை அரசு தனியார் வசம் ஒப்படைத்தது. தனியார் நிறுவனங்கள் லாபமடைய வேண்டும் என்பதற்காக, குடிமக்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டிய பொறுப்பில் இருந்து அரசு தன்னை மெல்ல விடுவித்து கொள்கிறது. தனியார் நுழைந்த பிறகு தண்ணீர் விற்பனை பண்டமாக மாறுகிறது. தண்ணீர் என்னும் பிறப்புரிமை மனிதர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. இப்படியான மோசடியான திட்டங்களை ஏன் அரசு செய்கிறது என்றால், உலக வங்கி நாடுகளையெல்லாம் மிரட்டி, நிர்பந்திக்கிறது. உலகநாடுகளுக்கு தண்ணீரை தனியார்மயமாக்குவது என்று நிபந்தனையின் கீழ்த்தான் கடன் தருகிறது. தண்ணீர் என்பது மனிதனின் உயிராதரம் என்று சொல்லி வந்த ஐநா., தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் பண்டம் என்று 1992இல் ஏற்றுக் கொள்கிறது. உலக பாட்டில் தண்ணீர் வர்த்தகத்தின் ஆண்டு சராசரி மதிப்பு 70,000 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர். உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகித மக்கள்தான் பாட்டில் தண்ணீரை வாங்குகின்றனர் என்றால் தண்ணீர் வர்த்தகத்தின் லாபத்தை எண்ணிப் பாருங்கள். தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராக போராடி, தனியார் நிறுவனங்களை விரட்டியடித்து, தண்ணீரை அரசுடைமையாக்குவதும், பொதுவுடைமையாக்குவதும் தான் குடிநீர் மீட்கிற பணியாகும்.
இந்த அரசியல் அறியாமல் இருக்கும்வரை நீங்கள் தன்னார்வலர். அரசியல் புரிதல் ஏற்பட்டால் நீங்கள் தோழர். குப்பைகளை அள்ளும் தன்னார்வலராக இருக்க போகிறீர்களா? அல்லது அநீதிகளுக்கு எதிராக போராடும் தோழர்களாக இருக்க போகுறீர்களா? என்பது உங்கள் கையில். நீர்நிலைகளில் குப்பை அகற்றுதல் என்ற பணியை மக்களை திரட்டுகிற உத்தியாக மேற்கொள்ள விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் இலக்கு உலகமயத்திற்கு எதிரான போராட்டம்தான் எனில் வாழ்த்துகள். பெயர், புகழ், நன்கொடை, ஊடக வெளிச்சம், மனநிம்மதி இதுதான் உங்கள் விருப்பம், இலக்கு என்றால், இந்த கட்டுரை அடங்கிய காகிதங்களை வேறு ஒருவரின் கைகளில் கொடுத்துவிடுங்கள். இது உங்களுக்காக எழுதப்பட வில்லை.
-- தமிழ்தாசன்
22.03.2017
துணை செய்த நூல்கள்:
தவிக்குதே தவிக்குதே - பாரதி தம்பி
பண்பாட்டு அசைவுகள் - தொ.ப
புட்டிநீர் - நக்கீரன்
தமிழக பாசன வரலாறு - கோமதி நாயகம்
துணை செய்த நூல்கள்:
தவிக்குதே தவிக்குதே - பாரதி தம்பி
பண்பாட்டு அசைவுகள் - தொ.ப
புட்டிநீர் - நக்கீரன்
தமிழக பாசன வரலாறு - கோமதி நாயகம்
Comments
Post a Comment