சூழலியல் சமூக நீதி - தொட்டியபட்டி

Image may contain: one or more people and outdoor

சூழலியல் சமூக நீதி - தொட்டியபட்டி நிலமற்ற கூலி விவசாய தொழிலாளர்களின் பிரச்சனையோ, தண்ணீர் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் மீதான வன்முறையோ, மீனவர் படுகொலையோ, காடுகளில் இருந்து மலைவாழ் மக்கள் விரட்டியடிப்பு உள்ளிட்ட சமூக அநீதி சிக்கல்கள் சூழலியல் பிரச்சனைகளோடு பிணைந்திருக்கின்றன. அணு உலை, நியூட்ரினோ உள்ளிட்ட அரசின் பேரழிப்பு திட்டங்களால் பாதிக்கப்பட போவது எளிய உழைக்கும் மக்கள்தான். அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூக மக்கள்தான் அரசின் பலிபீடங்களுக்கு காணிக்கையாக்கபடுகிறார்கள். பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கு எதிராக ஓரணியில் எளிய மக்கள் அனைவரும் பாட்டாளி வர்க்கமாக ஒன்று திரண்டு விடக்கூடாதென்று, சாதிய மோதல்களை, முரண்களை தக்கவைக்கிற அல்லது வளர்த்தெடுப்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. சூழலியல் அரசியல் பிரச்சாரம் அல்லது கருத்துருவாக்கம் இதனை உள்ளடக்கியதாக இருக்கிறது. இயற்கை வளங்களை தங்கள் உழைப்பின் மூலம் உற்பத்தி பொருள்களாக மாற்றுகிற பாட்டாளி வர்க்கத்தின் நிகழ் சிக்கல்களை, பல சூழலியல் செயற்பாட்டாளர்கள் பேசு பொருளாக முன்வைப்பதே இல்லை. மக்களை நீக்கிவிட்டு இயற்கை வளங்களையும், பல்லுயிரிகளையும் பாதுகாப்பது மட்டுமே சூழலியல் மீட்பாக, தொண்டு நிறுவனங்கள் சூழலியல் கருத்தாக வளர்த்தெடுக்கின்றன. இதனை வர்க்க ரீதியாக எதிர் கொள்வதிலிருந்தே மக்களுக்கான சூழலியல் கருத்துருவாக்கம் துவங்குகிறது. அவ்வகையில் தொட்டியபட்டியில் சுடுகாட்டு அடிகுழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற அருந்ததியின மக்களை, விரட்டிவிட்டு, தங்கள் ஆதிக்கத்தை நிறுவுவதற்காக அருந்ததியின மக்களின் வீடுகளை, பொருட்களை சேதப்படுத்தி தீயிட்டு கொளுத்தியிருக்கிறார்கள் ஆதிக்க வெறிகொண்ட நாயுடு சமூகத்தை சேர்ந்தவர்கள். தண்ணீர் ஒட்டுமொத்த உயிரினங்களின் உரிமை என்று பேசுகிற சூழலியல் ஆர்வலர்கள், சகமனிதனியினத்தின் உரிமை மறுப்பாக நீடிக்கிற தண்ணீர் குறித்து பேச வேண்டும். ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் நிலம், நீர், காடு, மலை மீது கொண்டுள்ள உரிமை பறிக்கப்படுவதை உரையாடுவதிலிருந்தும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்பதிலும் இருந்தும் துவங்குகிறது சூழலியல் சமூக நீதி. இந்த சிக்கலையும், வன்முறையையும் நீட்டிக்கும் அரசின் தண்ணீர் தனியார்மய கொள்கைகளை எதிர்க்க வேண்டும். தீண்டாமையை சட்டம்போட்டு தடை செய்தவர்கள் தீண்டாமையின் வேராக இருக்கிற சாதியை ஏன் தடை செய்யவில்லை? என்கிற கேள்விக்கான பதிலில் இருக்கிறது இங்கு இயங்குகிற அமைப்புமுறையின் லட்சணம். குடிநீர், சமையல், குளியல் உள்ளிட்ட அருந்ததியின மக்களின் அடிப்படை தேவைக்கு மறுக்கப்படுகிற தண்ணீரானது, அதே மக்களிடம் பொது கழிப்பறைகளை கையால் சுத்தம் செய்வதற்கு மட்டும் அரசால் இலவசமாக தருப்படுகிறதென்றால், அதன் அரசியலை பேசுவதே சூழலியல் சமூகநீதி அல்லது பெரியாரிய அம்பேத்காரிய சூழலியல் நாணல் நண்பர்கள் இயக்கம் 8608266088 4.4.2017

Comments

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

மாட்டு இறைச்சியும் எங்கள் பண்பாடே!

வெள்ளிமலை கோயில்காட்டை மீட்போம்